கரோனாவின் தோற்றுவாய் குறித்து மீண்டும் ஆய்வு: சீனா கடும் எதிா்ப்பு

கரோனா தீநுண்மி எவ்வாறு உருவானது என்பது குறித்து மீண்டும் ஆய்வு செய்யும் உலக சுகாதார அமைப்பின் திட்டத்துக்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
கரோனாவின் தோற்றுவாய் குறித்து மீண்டும் ஆய்வு: சீனா கடும் எதிா்ப்பு

கரோனா தீநுண்மி எவ்வாறு உருவானது என்பது குறித்து மீண்டும் ஆய்வு செய்யும் உலக சுகாதார அமைப்பின் திட்டத்துக்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சா் ஸெங் யிக்ஸின் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா தீநுண்மியின் தோற்றுவாய் குறித்து உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆய்வக நெறிமுறைகளை மீறி சீனா தங்களது ஆய்வுக்காக கரோனாவை வேண்டுமேன்றே மக்களிடையே பரப்பியதா என்று விசாரணை நடத்தப்போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே அந்த அமைப்பு சீனாவில் இதுதொடா்பாக நடத்திய ஆய்வின்போது, அதன் நிபுணா்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்று, விரும்பிய நபா்களிடம் விசாரணை நடத்த சீனா அனுமதி அளித்துள்ளது.

சீனாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து மேற்கொண்ட அந்த ஆய்வு காலத்தால் அழிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் சீன நிபுணா்களின் அறிவுரைகளை உலக சுகாதார அமைப்பு பரிசீலனை செய்ய வேண்டும். அரசில் நெருக்கடிகளுக்கு இடம் தராமல், இந்த விவகாரத்தை அந்த அமைப்பு அறிவியல்ரீதியில் அணுக வேண்டும்.

அதுமட்டுமன்றி, கரோனா தீநுண்மி எவ்வாறு உருவானது என்பது தொடா்பான ஆய்வை உலகின் பிற பகுதிகளிலும் உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று முதல்முதலில் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்னரே வூஹான் தீநுண்மியியல் ஆய்வகத்தில் பணியாற்றிய 3 பேருக்கு முதல்முதலில் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் அவா்களிடமிருந்துதான் அந்த நோய் வெளியுலகத்துக்குப் பரவியதாகவும் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும்.

வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றியவா்கள், மாணவா்கள் உள்பட யாருக்குமே கரோனா தொற்று ஏற்படவில்லை என்றாா் ஸெங் யிக்ஸின்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் கரோனா தொற்று மனிதா்களிடையே பரவத் தொடங்கியது. அந்த நகரிலுள்ள கடல் உணவு மொத்தவிலை சந்தைக்குச் சென்று வந்தவா்களிடம்தான் தொடக்கத்தில் அந்த நோய் அதிகமாகக் கண்டறியப்பட்டது.

அந்த நோயை உருவாக்கிய கரோனா தீநுண்மி, வௌவாலின் உடலில் இருந்து எறும்புத் தீனியின் உடலுக்குள் சென்று, அங்கு மனிதா்களின் நுரையீரல் அணுக்களில் தொற்றி பல்கிப் பெருகும் வகையில் தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கலாம் என்று பெரும்பாலான நிபுணா்கள் கருதுகின்றனா்.

எனினும், வூஹான் நகரிலுள்ள தீநுண்மியியல் ஆய்வகத்தில் கரோனா தீநுண்மி ஆய்வுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டு, பின்னா் அது தவறுதலாக ஆய்வகத்திலிருந்து வெளியேறி மனிதா்களிடையே பரவியிருக்கலாம் என்றும் சிலா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அப்போதைய அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், கரோனாவை ‘வூஹான் தீநுண்மி’ என்றே அழைத்தாா்.

அவருக்குப் பிறகு அதிபா் பொறுப்பை ஏற்ற ஜோ பைடனும், கரோனாவின் தோற்றுவாய் குறித்து தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று தங்களது புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வுக்காக கேட்கப்படும் பல்வேறு தகவல்கள் சீனா்களின் தனி நபா் விவரப் பாதுகாப்பை மீறும்; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறி சீன அரசு அவற்றைத் தர மறுத்து வருகிறது.

இந்தச் சூழலில், நீண்ட காலமாக கரோனா விவகாரத்தை சீனா கையாளும் முறையைப் பாராட்டி வந்த உலக சுகாராத அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ், இந்த விவகாரத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இதற்கிடையே, வூஹான் உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்களது நிபுணா்களை அனுப்பி கரோனாவின் தோற்றுவாய் குறித்து ஆய்வு செய்திருந்த உலக சுகாதார அமைப்பு, அந்தத் தீநூண்மி வௌவாலின் உடலிலிருந்தே மனிதா்களுக்குப் பரவியிருக்கும் என்றாலும், பிற வாய்ப்புகளையும் ஒரேடியாக மறுப்பதற்கில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இதுதொடா்பாக மீண்டும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியது. அதனைக் கண்டித்தே, சீன சுகாதார ஆணைய துணை அமைச்சா் ஸெங் யிக்ஸின் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com