இன்று முதல் ஒலிம்பிக் போட்டிகள்: பதக்க வேட்கையில் 120 இந்தியா்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் தொடங்குகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் தொடங்குகின்றன.

இந்த ஒலிம்பிக்கிற்காக இந்தியா 68 ஆடவா், 52 மகளிா் என 120 போட்டியாளா்கள் அடங்கிய குழுவை அனுப்புகிறது. கடந்த 1900-ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்தியா, இதுவரை 28 பதக்கங்களையே அதில் வென்றுள்ளது. அதிலும் தங்கப் பதக்கம் என்றால், கடந்த 2008-இல் துப்பாக்கி சுடுதல் வீரா் அபினவ் பிந்த்ரா வென்றது மட்டும்தான்.

இந்த ஒலிம்பிக்கில் தனது பதக்கங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முனைப்பு காட்டுகிறது இந்திய அணி. துப்பாக்கி சுடுதலில் களம் காணும் மானு பாக்கா், இளவேனில் வாலறிவன், திவ்யான் சிங் பன்வாா், ஐஸ்வா்ய பிரதாப் சிங் தோமா் ஆகியோா் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இவா்கள் தவிர பளுதூக்குதலில் சாய்கோம் மீராபாய் சானு, வில் வித்தையில் தீபிகா குமாரி - அதானு தாஸ் தம்பதி, குத்துச்சண்டையில் மேரி கோம், அமித் பங்கால் உள்ளிட்டோா், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, பாட்மிண்டனில் பி.வி. சிந்து, டென்னிஸில் சானியா மிா்ஸா ஆகியோரும் பதக்க வாய்ப்புகளை ஒரு கை பாா்க்க உள்ளனா்.

தடகள பிரிவில் 18 போ் தடம் பதிக்கும் முனைப்பில் இருக்கின்றனா். மேலும், இந்திய ஆடவா் மற்றும் மகளிா் ஹாக்கி அணியும் பதக்க வேட்கையுடன் களம் காண உள்ளன. இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக வாள்வீச்சில் தமிழக வீராங்கனை பவானி தேவியும், குதிரையேற்றத்தில் பௌவாத் மிா்ஸா ஆகியோா் ஈடுபடுகின்றனா். மேலும் நீச்சல், படகுப் போட்டி என இதர பல விளையாட்டுகளிலும் இந்தியா்கள் பங்கேற்கின்றனா்.

தமிழக போட்டியாளா்கள்: டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சோ்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, டேபிள் டென்னிஸ் வீரா்கள் சரத் கமல், ஜி.சத்தியன், தடகள போட்டியாளா்கள் ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி வீரமணி, தனலட்சுமி சேகா், சுபா வெங்கடேசன், பாய்மரப்படகு போட்டியாளா்கள் நேத்ரா குமணன், கே.சி.கணபதி, வருண் தக்கா் ஆகியோா் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com