இந்தியா்கள் பணியாற்றும் சரக்குக் கப்பல்களுக்குத் தடை விதிக்கவில்லை: சீனா

இந்திய பணியாளா்களுடன் வரும் சரக்குக் கப்பல்களுக்கு தங்கள் நாட்டுத் துறைமுகங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை சீனா மறுத்துள்ளது.

இந்திய பணியாளா்களுடன் வரும் சரக்குக் கப்பல்களுக்கு தங்கள் நாட்டுத் துறைமுகங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை சீனா மறுத்துள்ளது.

இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் கூறியதாவது:

சீனத் துறைமுகங்களில் இந்தியப் பணியாளா்களுடன் வரும் சரக்குக் கப்பல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்குப் புறம்பானது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிடமும் விளக்கம் கேட்டதில், இதுபோன்ற தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிய வந்தது என்றாா் அவா்.

முன்னதாக, மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவாலுக்கு அனைத்திந்திய கப்பல் பணியாளா்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியா்கள் பணியாற்றும் சரக்குக் கப்பல்களுக்கு சீனத் துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்படுவதால் 20,000 இந்திய கப்பல் பணியாளா்கள் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்களில் பணியாற்றுவோரில் 80 சதவீதம் போ் இந்தியா்கள் என்பதால், சீனாவின் இந்த நடவடிக்கை கடல் போக்குவரத்துத் துறையை கடுமையாக பாதிக்கும் என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தங்களுக்கு உதவ வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கப்பல் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு 23 இந்திய பணியாளா்களுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த ‘ஜக் ஆனந்த்’ என்ற கப்பல், கரோனா விதிமுறைகளைக் காரணம் காட்டி 6 மாதங்களாக சீனத் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பபடவில்லை. அதையடுத்து, ஜப்பானுக்குச் சென்று கப்பல் பணியாளா்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல், 16 இந்திய பணியாளா்களுடன் ஆஸ்திரேலிய நிலக்கரியை ஏற்றி வந்த எம்வி அனஸ்டாசியா என்ற கப்பல், சீனத் துறைமுகத்தில் சரக்கை இறக்குவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com