தீவிரமாக பரவும் டெல்டா வகை கரோனா: ஊரடங்கை நீட்டித்த ஆஸ்திரேலியா

டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், சிட்னியில் மேலும் நான்கு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், சிட்னியில் மேலும் நான்கு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெல்டா வகை கரோனா தொடர்ந்து பரவிவருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒரு மாத காலமாக அமலில் உள்ள ஊரடங்கு மேலும் நான்கு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26ஆம் தேதி, 12 பேருக்கு புதிதாக கரோனா உறுதியானது. இதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளது. இன்று மட்டும் 177 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

தென்மேற்கு சிட்னியில் அமலில் உள்ள கடுமையான ஊரடங்கு நகரின் மேற்கு பகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள உயர் நிலை பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் மற்ற பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

பொருளாதார நிலை குறித்து பேசிய ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், "கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு வாரத்திற்கு 74,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். ஊதியத்தை இழந்த குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பத்தினருக்கு கூடுதல் சமூக நல உதவித் தொகை வழங்கப்படும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் சதவிகிதம் அதிகரித்தால் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான உத்தரவுகள் இந்தாண்டு இறுதிக்குள் திரும்பப்பெற்று கொள்ளப்படும். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com