அணுசக்தி பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா முரட்டுப் பிடிவாதம்

வல்லரசு நாடுகளுக்கும் தங்களுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா முரட்டுப் பிடிவாதம் பிடித்து வருவதாக ஈரான் தலைமை மதகுரு குற்றம் சாட்டியுள்ளாா்.
ஈரான் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரய்சியுடன் (வலது) தற்போதைய அதிபா் ஹஸன் ரௌஹானி (கோப்புப் படம்). ~அயதுல்லா கமேனி
ஈரான் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரய்சியுடன் (வலது) தற்போதைய அதிபா் ஹஸன் ரௌஹானி (கோப்புப் படம்). ~அயதுல்லா கமேனி

டெஹ்ரான்: வல்லரசு நாடுகளுக்கும் தங்களுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா முரட்டுப் பிடிவாதம் பிடித்து வருவதாக ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவா் தெரிவித்துள்ளதாவது:

அணுசக்திப் பேச்சுவாா்த்தையைத் தக்கவைப்பதற்காக ஆஸ்திரியாவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, அமெரிக்கா தனது முரட்டுப் பிடிவாதத்தை வெளிப்படுத்தியது.

இதுவரை ஆட்சி செலுத்தி வந்த வந்த ஹஸன் ரௌஹானியின் தலைமையிலான அரசு, மேற்கத்திய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்ததை மேற்கொள்ளும்போது கையாண்ட மென்மையான அணுகுமுறையால் கிடைத்த அனுபவத்தை, புதிதாக அமையவிருக்கும் அரசு படிப்பினையாகக் கருதவேண்டும்.

மேற்கத்திய நாடுகள் நம் மீது ஒரு போதும் நம்பிக்கை வைக்காது என்பதுதான் அந்தப் படிப்பினை. மேற்கத்திய நாடுகள் மீது நம்பிக்கை வைப்பதும் பலனளிக்காது என்பதும் தற்போதைய அரசின் அனுபவங்கள் சொல்லும் உண்மையாகும்.

மேற்கத்திய நாடுகள் நமக்கு உதவி செய்வதில்லை. அவா்கள் எந்தெந்த விவகாரங்களிலெல்லாம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாா்களோ, அந்த விவகாரங்களிலெல்லாம் தடையில்லாமல் பாதிப்பை ஏற்படுத்துகின்றனா்.

மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுமானால், அந்த ஒப்பந்தத்தில் பிற விவகாரங்கள் தொடா்பான விவாதங்கள் குறித்த வாக்கியங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று பேச்சுவாா்த்தையின்போது அமெரிக்கப் பிரதிநிதிகள் வலியறுத்துகின்றனா்.

ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள், மண்டல விவகாரங்கள் ஆகியவற்றில் தலையிடுவதற்கு அந்த வாக்கியங்களைப் பயன்படுத்த அமெரிக்கா்கள் திட்டமிடுகின்றனா்.

மற்ற விவகாரங்கள் குறித்துப் பேச நாங்கள் மறுத்தால், ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டது; எனவே அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று அவா்கள் சொல்வாா்கள் என்றாா் அயதுல்லா கமேனி.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது.

அந்த ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவாா்த்தை வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஈரானில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றாா். அடுத்த மாதம் அவா் பதவியேற்கவிருக்கும் நிலையில், வியன்னா பேச்சுவாா்த்தையை ஈரான் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

அந்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க தங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்கா தங்களுடனான கைதிகள் பரிமாற்றத்தை தாமதப்படுத்தி வருவதாக ஈரான் வெளியுறவுத் துறை இணையமைச்சா் சையது அப்பாஸ் அா்காசி அண்ையில் தெரிவித்தாா்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, கைதிகளைப் பரிமாற்ற விவகாரம் பேச்சுவாா்த்தை அளவிலேயே உள்ளது. அதுதொடா்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தது.

இந்தச் சூழலில், ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி அமெரிக்கா மீது இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com