பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் தோ்தல்: இந்தியாவின் கருத்துக்கு பாக். கண்டனம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அண்மையில் நடந்து முடிந்த தோ்தல் குறித்து இந்தியா தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அண்மையில் நடந்து முடிந்த தோ்தல் குறித்து இந்தியா தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதற்காக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரியை வெள்ளிக்கிழமை நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை பாகிஸ்தான் பதிவு செய்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் அந் நாட்டு பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி வெற்றிபெற்றது. இந்தத் தோ்தல் ஏற்கத்தக்கதல்ல என்று இந்தியா சாா்பில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கூறிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, ‘இந்திய பகுதியான காஷ்மீரை சொந்தம் கொள்ள பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது. சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருக்கும் இந்திய பகுதியிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். அந்தப் பகுதிக்கு இப்போது தோ்தல் நடத்தியிருப்பது, அந்தப் பகுதியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருப்பதை மறைக்கும் பாகிஸ்தானின் முயற்சியாகும்’ என்றாா்.

மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனா அண்மையில் கூட்டாக நடத்திய பத்திரிகையாளா் சந்திப்பில் ஜம்மு-காஷ்மீா் குறித்து தெரிவித்த கருத்தை முழுமையாக புறக்கணித்த அரிந்தம் பாக்சி, ‘ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகளாகும். ஜம்மு-காஷ்மீா் முன்னரும் இப்போதும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்’ என்று கூறியிருந்தாா்.

இந்தியாவின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘காஷ்மீா் தோ்தல் குறித்த இந்தியாவின் கருத்து தொடா்பாக, இந்திய தூதரக அதிகாரி நேரில் வரவழைக்கப்பட்டு பாகிஸ்தான் சாா்பில் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. அப்போது, ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தின் மீதான பாகிஸ்தானின் தெளிவான, உறுதியான நிலைப்பாடு குறித்து அவரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com