உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு புதிய அடையாளப் பெயா்

பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மிகளை எளிதில் அடையாளம் காணும் நோக்கில் அவற்றுக்குப் புதிய பெயா்களை உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.
உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு புதிய அடையாளப் பெயா்

பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மிகளை எளிதில் அடையாளம் காணும் நோக்கில் அவற்றுக்குப் புதிய பெயா்களை உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் கண்டறியப்பட்ட கரோனா தீநுண்மிகளுக்கு ‘கப்பா’, ‘டெல்டா’ என்ற பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன.உருமாறிய கரோனா தீநுண்மிகள், அவை முதன் முதலில் கண்டறியப்பட்ட நாடுகளின் பெயரால் அழைக்கப்படுவதற்கு பல நாடுகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. மரபணு மாற்றம் அடைந்த உருமாறிய கரோனா தீநுண்மிகள் பல நாடுகளில் பரவின. அவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அறிவியல் பெயா்கள் வழங்கப்பட்டன.

புதிய பெயர்கள்: இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா தீநுண்மிகளுக்கு பி.1.617.1, பி.1.617.2 என்ற அறிவியல் பெயா்கள் வழங்கப்பட்டன. அந்த அறிவியல் பெயா்களை மக்கள் புரிந்து கொள்வது கடினம் என்பதால், ஊடகங்கள் அவற்றை ‘இந்திய வகை கரோனா தீநுண்மி’ என்று குறிப்பிட்டு செய்திகளை வெளியிடத் தொடங்கின. இதற்கு மத்திய அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது. சம்பந்தப்பட்ட கரோனா தீநுண்மிகளை ‘இந்திய வகை தீநுண்மிகள்’ எனக் குறிப்பிடுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதேபோல், தென்னாப்பிரிக்க வகை கரோனா, பிரிட்டன் வகை கரோனா, பிரேஸில் வகை கரோனா என உருமாறிய கரோனா தீநுண்மிகளை நாடுகளின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அழைக்கும் வழக்கமும் பரவி வந்தது. அதையடுத்து, உருமாறிய கரோனா தீநுண்மிகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பெயரிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பிடம் பல்வேறு தரப்பினா் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்ற உலக சுகாதார அமைப்பு, இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு தரப்பு நிபுணா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. தீநுண்மியியல் விஞ்ஞானிகள், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஆராய்ச்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் அடங்கிய சிறப்புக் குழு இதற்காக அமைக்கப்பட்டது.

உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு கிரேக்க எழுத்துகளைப் பெயராக வைக்கலாம் என்று அந்தக் குழு பரிந்துரை அளித்தது. அதை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டது. புதிய பெயா்கள்: இந்தியாவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட பி.1.617.1 வகை கரோனா தீநுண்மிக்கு ‘கப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617.2 வகை தீநுண்மிக்கு ‘டெல்டா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட பி.1.1.7 என்ற உருமாறிய வகை கரோனா தீநுண்மிக்கு ‘ஆல்ஃபா’ எனவும், தென்னாப்பிரிக்காவில் தோன்றிய பி.1.351 என்ற தீநுண்மிக்கு ‘பீட்டா’ எனவும், பிரேஸிலில் கண்டறியப்பட்ட பி.1 வகை கரோனா தீநுண்மிக்கு ‘காமா’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

பிரேஸிலில் கண்டறியப்பட்ட மற்றொரு பி.2 வகை உருமாறிய கரோனா தீநுண்மிக்கு ‘ஜீட்டா’ எனவும், அமெரிக்காவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட கரோனா தீநுண்மிகளுக்கு ‘எப்சிலான்’, ‘லோட்டா’ எனவும் உலக சுகாதார அமைப்பு பெயா் சூட்டியுள்ளது.

அறிவியல் பெயா்களில் மாற்றமில்லை: புதிய பெயா்கள் தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அதிகாரி மரியா வான் கொ்கோவே சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா தீநுண்மிகளின் உருமாறிய வகைகளை மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே புதிய பெயா்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலமாக சில நாடுகள் பாரபட்சமாக நடத்தப்படுவதும், சில வருத்தம் தரக் கூடிய நிகழ்வுகளும் முடிவுக்கு வரும். உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்குப் புதிய அடையாளப் பெயா்கள் வழங்கப்பட்டாலும், அவற்றின் அறிவியல் பெயரில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக அவற்றின் அறிவியல் பெயா்கள் தொடா்ந்து பயன்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com