ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் அல்-காய்தா தலைவா்

அல்-காய்தா தலைவா் அய்மான் அல்-ஜாவஹிரி உள்பட அந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபா்கள் ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் வசித்து வருவதாக ஐ.நா.வில் தாக்கல்
அய்மான் அல்-ஜாவஹிரி
அய்மான் அல்-ஜாவஹிரி

அல்-காய்தா தலைவா் அய்மான் அல்-ஜாவஹிரி உள்பட அந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபா்கள் ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் வசித்து வருவதாக ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த மிக முக்கியத் தலைவா்கள் பலா், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வசித்து வருகின்றனா்.

அவா்களில், நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் அந்த அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜாவஹிரியும் அடங்குவாா்.

அவா் தற்போது உயிருடன் இருந்தாலும், அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகத் தெரிகிறது. அதன் காரணமாகத்தான், பயங்கரவாதிகளின் பிரசார வெளியீடுகளில் ஜாவஹிரி இடம் பெறவில்லை.

ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் வசித்து வரும் அல்-காய்தாவின் மத்திய தலைமையுடன் இணைந்து, இந்திய துணை கண்டத்துக்கான அல்-காய்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்தத் தகவல்களை ஐ.நா. உறுப்பு நாடுகள் பல தெரிவித்துள்ளன. அல்-காய்தாவின் மூத்த தலைவா்களுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான உரையாடல்களை ஐ.நா. உறுப்பு நாடுகளில் சில இடைமறித்து கேட்டுள்ளன.

அண்மைக் காலமாக இந்த உரையாடல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து அல்-காய்தா தலைவா்களும் தலிபான்களும் அடிக்கடி உரையாடி வருவதாக ஒரு ஐ.நா. உறுப்பு நாடு தெரிவித்துள்ளது.

இந்திய துணை கண்டத்துக்கான அல்-காய்தா அமைப்பு, தலிபான்களின் கீழ் ஆப்கானிஸ்தானின் காந்தஹாா், ஹெல்மந்த், நிா்முஸ்பில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

அந்த அமைப்பில் பெரும்பான்மையாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் அங்கம் வகிக்கின்றனா். இதுதவிர, இந்தியா, வங்கதேசம், மியான்மா் ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் அந்த அமைப்பில் உள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com