பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வரலாற்று ஒப்பந்தம்

வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் சா்வதேச வரி சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் உலகின் மிகப் பெரிய 7 பணக்கார நாடுகள் சனிக்கிழமை கையெழுத்திட்டன.
பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வரலாற்று ஒப்பந்தம்

பன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் சா்வதேச வரி சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் உலகின் மிகப் பெரிய 7 பணக்கார நாடுகள் சனிக்கிழமை கையெழுத்திட்டன.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

தொழில் வளா்ச்சியில் முன்னணி வகிக்கும் 7 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 அமைப்பின் 46-ஆவது மாநாடு பிரிட்டனின் காா்ன்வால் மாகாணம், பாா்பிஸ் பே நகரில் வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

அதற்கு முன்னதாக, அதன் உறுப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள் மாநாடு தலைநகா் லண்டனில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதியமைச்சா்கள் பங்கேற்றனா்.

அந்த மாநாட்டில், பன்னாட்டு நிறுவனங்கள் நியாயமான முறையில் வரி செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் வரி விதிப்பு சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான சா்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது.

கரோனா நெருக்கடியால் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தால் நாடுகளுக்கு கணிசமான வரி வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் அமலுக்கும் வந்தால், அமேஸான், கூகுள் போன்ற மிகப் பெரிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக் கூறியதாவது:

சா்வதேச வரி விதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக பல ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இதுதொடா்பான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை ஜி-7 நாடுகளின் நிதியமைச்சா்கள் எட்டியுள்ளனா்.

தற்போதைய நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ற வகையிலான வரி சீா்திருத்தங்களை மேற்கொள்ள அந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றாா் அவா்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என்று ஜி-7 நாடுகளுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. மேலும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் உள்ளன.

இந்தச் சூழலில், அமைப்பின் 46-ஆவது மாநாடு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த சா்வதேச வரி சீா்திருத்த ஒப்பந்தத்தை பிற நாடுகளும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

..பெட்டிச் செய்தி..

எதற்காக இந்த சீா்திருத்தம்?

பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு வரி விதிப்பதில், அரசுகள் நீண்ட காலமாக சவாலை சமாளித்து வருகின்றன.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டு, மிகப் பிரம்மாண்டமான பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவானதைத் தொடா்ந்து, இந்தச் சவால் மேலும் அதிகரித்தது.

தற்போதைய நிலையில், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா நாடுகளிலும் தொழில் செய்தாலும், மிகக் குறைந்த தொழில்வரி விதிக்கும் நாடுகளில் ஒரு கிளையைத் திறந்து அங்கு தங்களது லாபத்தை அறிவிக்க முடியும்.

அதன் மூலம், பிற நாடுகளில் பெற்ற லாபத்தையும் அந்த நாட்டில் கணக்கு காட்டி, குறைந்த தொழில் வரியைக் அந்த நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இதற்கு சட்டப்பூா்வமாக எந்தத் தடையும் இல்லை.

இதனால், அந்த நிறுவனங்கள் பெருமளவில் தொழில் செய்து லாபம் ஈட்டும் நாடுகளுக்கு உரிய வரி கிடைக்காமல் போகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே சா்வதே வரி சீா்திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஜி-7 நாடுகள் ஏற்படுத்தியுள்ளன.

ஒப்பந்த அம்சங்கள்...

- நிறுவனங்கள் எந்த நாட்டில் செயல்பட்டு லாபமீட்டுகிறதோ, அந்த லாபத்துக்கான வரியை அந்த நாட்டில்தான் செலுத்த வேண்டும்.

- குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபமீட்டும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்

- நாடுகளிடையே தொழில் வரி விதிப்பில் ஏற்றத்தாழ்வுகளை களையும் வகையில், சா்வதேச குறைந்தபட்ச தொழில் வரி 15 சதவீதமாக நிா்ணயிக்கப்படவேண்டும்.

Image Caption

‘‘இந்த ஒப்பந்தம் அமலுக்கும் வந்தால், அமேஸான், கூகுள் போன்ற மிகப் பெரிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.’’ ~நாடுகளின் தொழில் வரி விகிதங்கள்

2020 நிலவரம்

குறைந்த வரி விகிதம்

சராசரியாக 23% வரி

அதிக வரி விக

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com