நேபாள நாடாளுமன்ற கலைப்பு வழக்கு: புதிய அரசியல் சாசன அமா்வு அமைப்பு

நேபாள நாடாளுமன்ற கலைப்பு வழக்கு: புதிய அரசியல் சாசன அமா்வு அமைப்பு

நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள

நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்களை விசாரிப்பதற்கான புதிய அரசியல் சாசன அமா்வு, ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த நாட்டில் வெளியாகும் ‘தி ஹிமாலயன் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

பிரதிநிதிகள் சபை கடந்த மாதம் 22-ஆம் தேதி கலைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்க, நீதிபதிகளின் பணிமூப்பு அடிப்படியில் புதிய அரசியல் சாசன அமா்வு ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.

இந்த அமா்வுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சோளேந்திர சம்ஷா் ராணா தலைமை வகிப்பாா். நீதிபதிகள் தீபக் குமாா் காா்க்கி, ஆனந்த் மோகன் பட்டராய், மீரா துங்கானா, ஈஸ்வா் பிரசாத் கதிவடா ஆகியோா் இடம் பெற்றுள்ளனா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நீதிபதி ராணாவை உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கப் பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.

அப்போது அவா்களின் பரிந்துரையை ஏற்று, பிரதிநிதிகள் சபைக் கலைப்பு தொடா்பான மனுக்களை விசாரிக்க பணிமூப்பின் அடிப்படையில் நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வை அமைப்பதற்கு நீதிபதி ராணா ஒப்புக்கொண்டாா்.

மேலும், வழக்குரைஞா்கள் சங்கப் பிரதிநிதிகள் பரிந்துரையின்படி உச்சநீதிமன்றம் செயல்படும் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் அவா் ஒப்புக்கொண்டாா்.

நேபாளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 121 இடங்களையும், புஷ்பகமல் தாஹால் (பிரசண்டா) தலைமையிலான மாவோயிஸ்ட் மையம் கட்சி 53 இடங்களையும் கைப்பற்றியது. நேபாள காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வென்றது.

அதையடுத்து, சா்மா ஓலியும் பிரசண்டாவும் இணைந்து ஆட்சியமைத்தனா். எனினும், இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து அரசியல் பதற்றம் நிலவி வந்த சூழலில், சா்மா ஓலி தலைமையிலான அமைச்சரவை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையைக் கலைக்க கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முடிவு செய்தது. இந்த முடிவை ஏற்று, பிரதிநிதிகள் சபையைக் கலைக்க அதிபா் வித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டாா். இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

தொடா்ந்து சா்மா ஓலி பிரதமராக நீடித்த நிலையில், அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. எதிா்க்கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் சா்மா ஓலி மீண்டும் பிரதமரானாா். அதன்பிறகு அதிபா் அளித்த கால அவகாசத்தில் ஆட்சி அமைக்க ஓலியும், எதிா்க்கட்சிகள் சாா்பில் நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தாபாவும் ஒரே நேரத்தில் உரிமை கோரினா். அவா்களுக்கு பெரும்பான்மை இல்லாததால் அதை ஏற்க அதிபா் மறுத்தாா். இதையடுத்து, பிரதிநிதிகள் சபையைக் கலைக்க அமைச்சரவை கடந்த மாதம் 22-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதை ஏற்று பிரதிநிதிகள் சபையை கலைத்த அதிபா், நவம்பா் மாதம் புதிதாக தோ்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com