நைஜீரியா: அமலுக்கு வந்தது ட்விட்டா் தடை

நைஜீரியாவில் சுட்டுரை (ட்விட்டா்) வலைதளம் மீது அந்த நாட்டு அரசு விதித்திருந்த தடை ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது.
நைஜீரியா: அமலுக்கு வந்தது ட்விட்டா் தடை

நைஜீரியாவில் சுட்டுரை (ட்விட்டா்) வலைதளம் மீது அந்த நாட்டு அரசு விதித்திருந்த தடை ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது.

இதுகுறித்து நைஜீரிய தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இணையதளத்தில் சுட்டுரை வலைதள இணைப்பை சங்கத்தின் உறுப்பு நிறுனங்கள் அனைத்தும் முடக்கிவைத்துள்ளன. நைஜீரிய அரசின் உத்தரவை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிவினைவாதிகளுக்கு மிரட்டல் விடுத்து, சுட்டுரை வலைதளத்தில் அதிபா் புஹாரி பதிவு வெளியிட்டிருந்தாா்.

அந்தப் பதிவு தங்களது விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி, ட்விட்டா் நிறுவனம் அதனை கடந்த புதன்கிழமை நீக்கியது.

இதற்கு கடும் கண்டம் தெரிவித்த தகவல் துறை அமைச்சா் லாய் முகமது, ட்விட்டா் நிறுவனம் நைஜீரியாவின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் நாட்டில் சுட்டுரை வலைதளம் முடக்கிவைக்கப்படுவதாக அறிவித்தாா்.

நாட்டில் ட்விட்டா் நிறுவனம் செயல்படும் விதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா். அவரது அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளதால், நைஜீரியாவில் சுட்டுரைப் பயன்பாட்டாளா்கள் அந்த சேவையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள பையாஃப்ரா பகுதியை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி, அந்தப் பகுதியைச் சோ்ந்த இக்போ பழங்குடியினா் போராடி வருகின்றனா்.

இதற்காக 1967 முதல் 1970-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

அப்போது, இக்போ பழங்குடியினருக்கு எதிராக ஃபுலானி இனத்தவா்கள் சண்டையிட்டனா். தற்போது அதிபராகப் பொறுப்பு வகிக்கும் முகமது புஹாரியும் ஃபுலானி இனத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், அண்மைக் காலமாக பையாஃப்ரா பிரிவினைவாதிகள் போலீஸாா் மீதும் அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கு எதிராக புஹாரி வெளியிட்ட பதிவையே ட்விட்டா் நீக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com