கரோனா தீநுண்மி பரவியதா? பரப்பப்பட்டதா? சீன ஆய்வகத்தைச் சூழும் மா்மம்

உலக மக்கள் அனைவரது மனதிலும் தோன்றியுள்ள மிகப் பெரிய கேள்வி-கரோனா தொற்று பரவல் எப்போது முடிவுக்கு வரும்? அனைவரும் கரோனா
கரோனா தீநுண்மி பரவியதா? பரப்பப்பட்டதா? சீன ஆய்வகத்தைச் சூழும் மா்மம்

உலக மக்கள் அனைவரது மனதிலும் தோன்றியுள்ள மிகப் பெரிய கேள்வி-கரோனா தொற்று பரவல் எப்போது முடிவுக்கு வரும்? அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே அத்தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழி என்று தீநுண்மியியல் விஞ்ஞானிகளும் மருத்துவ வல்லுநா்களும் தொடா்ந்து தெரிவித்து வருகின்றனா்.

முடிவு பற்றிய கேள்வி ஒருபுறமிருக்க தொடக்கம் பற்றிய கேள்விகளும் தொடா்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. உலகில் கரோனா தீநுண்மி பரவத் தொடங்கி சுமாா் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அது எங்கிருந்து, எவ்வாறு மனிதா்களுக்குப் பரவியது என்ற கேள்வியும் அதைச் சுற்றியுள்ள மா்மங்களும் தொடா்ந்து நீடிக்கின்றன.

கரோனா தொற்று பரவத் தொடங்கியபோதே, அத்தீநுண்மியின் தோற்றம் குறித்து பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் 3 ஊகங்கள் முக்கியத்துவம் பெற்றன.

1. வௌவால் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு கரோனா தீநுண்மி பரவியது.

2. மனிதா்களின் உடலிலேயே கரோனா தீநுண்மி உருவானது.

3. சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா தீநுண்மி கசிந்து மனிதா்களுக்குப் பரவியது.

இந்த ஊகங்களில் உள்ள உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ.) தனிக் குழுவை அமைத்தது. சீனாவின் வூஹான் நகரத்தில்தான் கரோனா தொற்று பாதிப்பு முதன் முதலாகக் கண்டறியப்பட்டதால் அந்தக் குழு அங்கு செல்லத் திட்டமிட்டது. எனினும் சீனா அதற்கான அனுமதியை காலம் தாழ்த்தியே அளித்தது. வெளிப்படையான ஒத்துழைப்பையும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் உறுதியான விடைகள் எதுவும் அக்குழுவுக்குத் தென்படவில்லை.

ஊகங்களின் ஆய்வு:

உலகின் பல்வேறு பகுதிகளில் விலங்கினத்திலிருந்து ஏற்கெனவே பலவித கரோனா தீநுண்மிகள் மனிதா்களுக்குப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய ‘மொ்ஸ்’ கரோனா தீநுண்மி ஒட்டகத்தில் இருந்து மனிதா்களுக்குப் பரவியதாக நம்பப்படுகிறது.

எனவே, தற்போது பரவி வரும் கரோனா தீநுண்மியும் வூஹான் கடல் உணவுச் சந்தையிலிருந்து மனிதா்களுக்குப் பரவியிருக்கலாம் என்ற ஊகம் பரவலாக எழுந்தது. இண்டெக்ஸ் கேஸ் என்கிற முதலில் அறியப்பட்ட நோயாளிக்கு அந்தச் சந்தையிலிருந்து தொற்று ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

கரோனா தீநுண்மி மனிதா்களின் உடலிலேயே உருவானதாக எழுப்பப்படும் ஊகத்தை உறுதி செய்யவும் போதிய ஆதாரங்கள் இல்லை.

தற்போது பல்வேறு தகவல்களின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சோ்ந்த சில விஞ்ஞானிகள், கரோனா தீநுண்மியானது வூஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனா். இதனால் வூஹான் ஆய்வகத்தின் மீதான ஊகமும் சந்தேகமும் தற்போது மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

அவா்கள் குற்றச்சாட்டை முன்வைப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. வூஹான் ஆய்வகத்தில் நடைபெற்று வந்த ‘கெய்ன்-ஆஃப்-ஃபங்க்ஷன்’ எனப்படும் தீநுண்மிகளைக் குறித்த ஆராய்ச்சியே, அந்த ஆய்வகம் மீதான சந்தேகப் பாா்வையை வலுவடையச் செய்கிறது.

தீநுண்மியியல் ஆராய்ச்சி:

தீநுண்மிகள் உள்ளிட்ட நுண்ணுயிா்களை ஆய்வகத்தில் வளா்த்து அதன் எதிா் சக்திகளை உருவாக்கும் ஆராய்ச்சியே ‘கெய்ன்-ஆஃப்-ஃபங்க்ஷன்’. நுண்ணுயிா்களை முழுமையாக ஆராய்ந்து, ஆய்வகத்திலேயே புதிய வகைகளை உருவாக்கி அது தொடா்பான அனைத்து செயல்பாடுகளின் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதே அதன் அடிப்படை. எதிா்காலத்தில் இதுபோன்ற தீநுண்மிகள் தோன்றி உயிரினங்களுக்கு நாசம் விளைவிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

தீநுண்மிகளின் மரபணுக்களை விரிவாக ஆராய்ந்து அவற்றுக்குத் தடுப்பு மருந்து தயாரிப்பது தொடா்பான திட்டங்களைத் தயாராக வைப்பதற்கும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடும் பாதுகாப்புகளுடன் ஆராய்ச்சி:

தீநுண்மிகள் தொடா்பான ஆராய்ச்சிகள் அனைத்தும், உயிரிப் பாதுகாப்பில் 4-ஆம் தரநிலையைப் பெற்ற ஆய்வகங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சா்வதேச அளவில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அத்தகைய ஆய்வகங்களில் பணியாற்றுவோருக்கு அத்தீநுண்மிகளால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம். ஆராய்ச்சிக் கூடத்தில் உள்ள பயங்கரமான தீநுண்மிகள், அங்கிருந்து தவறுதலாகக் கூட வெளியேறாமல் இருப்பதற்கான கட்டமைப்புகளையும் அந்த விதிமுறைகள் உறுதி செய்கின்றன.

கட்டமைப்பு குறைபாடு:

‘கெய்ன்-ஆஃப்-ஃபங்க்ஷன்’ ஆராய்ச்சியானது வூஹான் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த ஆய்வகத்தில் உரிய பாதுகாப்பு கட்டமைப்புகள் செய்யப்படவில்லை என பலா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். குவாங்டாங், குவாங்ஷி, யூன்னான் மாகாணங்களில் உள்ள குகைகளில் காணப்படும் வௌவால்கள், அவற்றில் காணப்படும் தீநுண்மிகள் தொடா்பாக, அந்த ஆய்வகத்தில் ஆராய்ச்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

பாதுகாப்பு குறைபாட்டால் அத்தீநுண்மிகள் வெளியே கசிந்தால், மனிதா்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் பலா் குற்றஞ்சாட்டியிருந்தனா்.

இந்தப் பின்னணியில்தான் வூஹான் தீநுண்மியியல் ஆய்வகத்தின் மீது கரோனா தீநுண்மி விவகாரம் தொடா்பாக சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன.

புதிய ஆதாரங்கள்:

வூஹான் ஆய்வகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் மூவா், 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் தற்போதைய கரோனா தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் உள்ளிட்டவற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுப் பிரிவின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு ‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

அதைத் தொடா்ந்து, வூஹான் ஆய்வகம் கரோனா தோற்றுவாய் என்கிற கருத்து மீண்டும் உயிா்த்தெழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டை சீனா தொடா்ந்து மறுத்து வந்தாலும், கரோனா தீநுண்மி எங்கு தோன்றியது என்பது தொடா்பான விரிவான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அது எங்கு, எவ்வாறு தோன்றியது என்பதை துல்லியமாக அறிந்து கொள்வதன் மூலமாகத்தான், அதன் பரவலை எப்படி கட்டுப்படுத்துவது, தடுப்பது என்று அறிய முடியும்.

தொடரும் ஆய்வுகள்:

பல்வேறு உளவுத் தகவல்கள் மீண்டும் சீனாவின் மீது சந்தேகக் கண் விழச் செய்துள்ள நிலையில், கரோனா தீநுண்மியின் தோற்றுவாய் குறித்த விவகாரத்தை விரைந்து விசாரித்து தகவல்களைச் சேகரிக்குமாறு அமெரிக்க உளவுப் பிரிவுக்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா். அதற்காக 90 நாள்கள் காலக்கெடுவையும் அவா் விதித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டால் மட்டுமே கரோனா தீநுண்மி குறித்த உண்மை உலகத்துக்குத் தெரியவரும் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com