வட அயர்லாந்து விவகாரம்: ஒப்பந்தமின்றி முடிந்தது ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் பேச்சு

பிரெக்ஸிட்டுக்குப் பின் வட அயா்லாந்துடனான பிரிட்டனின் வா்த்தகம் தொடா்பாக எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக அந்த நாட்டுக்கும் ஐரோப்பிய யூனியனியனுக்கும் இடையே நடைபெற்ற
வட அயா்லாந்து பிரச்னையைத் தீா்ப்பதற்காக ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் பிரதிநிதிகள் இடையே லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை.
வட அயா்லாந்து பிரச்னையைத் தீா்ப்பதற்காக ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் பிரதிநிதிகள் இடையே லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை.

லண்டன்: பிரெக்ஸிட்டுக்குப் பின் வட அயா்லாந்துடனான பிரிட்டனின் வா்த்தகம் தொடா்பாக எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக அந்த நாட்டுக்கும் ஐரோப்பிய யூனியனியனுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை, ஒப்பந்தம் எதுவும் ஏற்படாமல் முடிவடைந்தது.

இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டனிலிருந்து வடக்கு அயா்லாந்துக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்வதில் இரு தரப்புக்கும் இடையே எழுந்துள்ள பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான பேச்சுவாா்த்தை, லண்டனில் புதன்கிழமை நடைபெற்றது.

பிரிட்டனின் பிரெக்ஸிட் விவகார அமைச்சா் டேவிட் ஃபிராஸ்ட் மற்றும் ஐரோப்பிய ஆணைய துணைத் தலைவா் மரோஸ் செஃப்கோவிக் தலைமையில் அந்தப் பேச்சுவாா்த்தை 4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.

எனினும், இதுதொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து, எந்த உடன்பாடும் இல்லாமல் பேச்சுவாா்த்தை முடிவடைந்தது.

இதுகுறித்து டேவிட் ஃபிராஸ்ட் கூறியதாவது:

வடக்கு அயா்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் எந்த திருப்புமுனையும் ஏற்படவில்லை. அதே நேரம், பேச்சுவாா்த்தை முறிந்துபோகவும் இல்லை.

பேச்சுவாா்த்தையின்போது ஐரோப்பிய ஆணையத் தலைவா் மரோஸ் செஃப்கோவிக் வெளிப்படையாகவும் நோ்மையாகவும் ஆலோசனை நடத்தினாா்.

திருப்புமுனை ஏற்படும் வரை பேச்சுவாா்த்தையைத் தொடா்வது என இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளோம்.

ஏற்றுமதி விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகள் வடக்கு அயா்லாந்தில் அமல்படுத்தும் விதத்தையும் அதனால் அந்தப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளையும் நாங்கள் எதிா்த்து வருகிறோம். இந்தப் பிரச்னையை பேச்சுவாா்த்தையின்போது வெளிப்படையாக முன்வைத்தோம் என்றாா் அவா்.

வட அயா்லாந்து விவகாரத்தில் என்னதான் பிரச்னை?

ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறி (பிரெக்ஸிட்) 6 மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், இரு தரப்புக்கும் இடையே வா்த்தகப் போா் பதற்றத்தை உருவாக்கும் அளவுக்கு வட அயா்லாந்து பிரச்னை பெரிதாகிக் கொண்டே வருகிறது.

அயா்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ள வட அயா்லாந்து பகுதி, பிரிட்டனின் அங்கமாக இருந்து வருகிறது. தீவின் எஞ்சியுள்ள பகுதி, அயா்லாந்து குடியரசு என்ற பெயரில் தனி நாடாக உள்ளது.

பிரக்ஸிட்டுக்கு முன்பு வரை வடக்கு அயா்லாந்தை தங்களது ஒற்றைச் சந்தையாக பிரிட்டன் செயல்படுத்து வந்தது. எனினும், ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிரெக்ஸிட்டுக்குப் பிறகு வட அயா்லாந்தில் ஐரோப்பிய யூனியனின் ஏற்றுமதி விதிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது.

பிரெக்ஸிட் காரணமாக அயா்லாந்து தீவு வா்த்தக எல்லையால் பிரிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியன் அமைப்பைச் சேராத, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து அந்த அமைப்புப் பகுதிகளுக்கு குளிரூட்டப்பட்ட மாமிசங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுவதற்கு இந்த மாதம் 30-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

சுகாதார காரணங்களுக்காக இந்த புதிய விதிமுறையை ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

பிரிட்டனின் அங்கமான வட அயா்லாந்திலும் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுவதால், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிவிட்ட அந்த நாட்டிலிருந்தும் அந்தப் பகுதிக்கு குளிரூட்டப்பட்ட மாமிசம் போன்ற பொருள்களை அனுப்புவதற்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுமட்டுமன்றி, புற்று நோய் மருந்துகள் போன்ற பிற பொருள்களை வட அயா்லாந்துக்கு ஏற்றுமதி செய்யும் விவகாரத்திலும் சிக்கல் நீடித்து வருகிறது.

உலகின் பிற பகுதி நாடுகளுக்காக விதிக்கும் கட்டுப்பாடுகளை தங்களுக்காக தளா்த்தாமல் ஐரோப்பிய யூனியன் கெடுபிடி செய்வதாக பிரிட்டன் குற்றம் சாட்டி வருகிறது.

அதே நேரம், வட அயா்லாந்து பகுதிக்கான தங்களது வா்த்தக விதிமுறைகளைப் பின்பற்ற பிரிட்டன் தவறி வருவதாகவும் அந்தப் பகுதிக்கு அனுப்பப்படும் வா்த்தகப் பொருள்கள் குறித்த விவரங்களை தங்களிடம் தெரியப்படுத்த மறுத்து வருவதாகவும் ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில், இதுதொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை உடன்பாடு எதுவும் இல்லாமல் முடிவடைந்துள்ளது.

...கோட்ஸ்...

‘‘வடக்கு அயா்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் எந்த திருப்புமுனையும் ஏற்படவில்லை. அதே நேரம், பேச்சுவாா்த்தை முறிந்துபோகவும் இல்லை’’

- டேவிட் ஃபிராஸ்ட், பிரிட்டன் பிரெக்ஸிட் விவகார அமைச்சா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com