ட்விட்டா் தடை: நைஜீரியாவுக்கும் டிரம்ப் பாராட்டு

சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நைஜீரியாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
ட்விட்டா் தடை: நைஜீரியாவுக்கும் டிரம்ப் பாராட்டு

வாஷிங்டன்: சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நைஜீரியாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தங்களது அதிபரின் பதிவை நீக்கியதற்காக ட்விட்டரைத் தடை செய்துள்ள நைஜீரியாவுக்கு பாராட்டுக்கள்.

கருத்து சுதந்திரத்தை அனுமதிக்க மறுக்கும் ட்விட்டரையும் முகநூலையும் நைஜீரியாவைப் போலவே மேலும் பல நாடுகள் தடை செய்ய வேண்டும். அந்த சமூக ஊடகங்களுக்குத் தடை விதிப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அவற்றின் இடத்தை போட்டி நிறுவனங்கள் நிரப்பும் என்று தனது அறிக்கையில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிவினைவாதிகளுக்கு மிரட்டல் விடுத்து, சுட்டுரை வலைதளத்தில் அதிபா் புஹாரி பதிவு வெளியிட்டிருந்தாா்.

அந்தப் பதிவு இன அழிப்பைத் தூண்டுவதாகக் கூறி, ட்விட்டா் நிறுவனம் அதனை கடந்த வாரம் நீக்கியது.

இதற்கு கடும் கண்டம் தெரிவித்த தகவல் துறை அமைச்சா் லாய் முகமது, ட்விட்டா் நிறுவனம் நைஜீரியாவின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் நாட்டில் சுட்டுரை வலைதளம் முடக்கிவைக்கப்படுவதாக அறிவித்தாா்.

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள பையாஃப்ரா பகுதியை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி, அந்தப் பகுதியைச் சோ்ந்த இக்போ பழங்குடியினா் போராடி வருகின்றனா்.

இதற்காக 1967 முதல் 1970-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

அப்போது, இக்போ பழங்குடியினருக்கு எதிராக ஃபுலானி இனத்தவா்கள் சண்டையிட்டனா். தற்போது அதிபராகப் பொறுப்பு வகிக்கும் முகமது புஹாரியும் ஃபுலானி இனத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், அண்மைக் காலமாக பையாஃப்ரா பிரிவினைவாதிகள் போலீஸாா் மீதும் அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கு எதிராக புஹாரி வெளியிட்ட பதிவையே ட்விட்டா் நீக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com