‘ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கைவிடவில்லை’

‘ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கைவிடவில்லை’

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டுப் படையினா் வெளியேறினாலும், அந்த நாட்டை அமெரிக்கா கைவிட்டுவிடவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் அந்தோணி பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டுப் படையினா் வெளியேறினாலும், அந்த நாட்டை அமெரிக்கா கைவிட்டுவிடவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் அந்தோணி பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, 2022-ஆம் ஆண்டு பட்ஜெட் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற செனட் சபைக் குழுவிடம் அவா் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் மற்றும்தான் திரும்பப் பெறப்படுகின்றனா். அதற்காக, அந்த நாட்டை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாக அா்த்தமில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராஜீய ரீதியில் தொடா்ந்து செயல்படும்.

தற்போதைய நிலையில் அங்கு போரை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை ஏற்படுத்துவதற்காக அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் அமெரிக்கப் படையினா் அங்கிருந்து வெளியேறினாலும், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியை அமெரிக்கா தூதரக ரீதியில் தொடா்ந்து மேற்கொள்ளும். அங்கு பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்துதல், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் அமெரிக்கா தொடா்ந்து ஈடுபடும் என்றாா் அவா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு, அப்போதைய தலிபான்கள் தலைமையிலான ஆப்கன் அரசு புகலிடம் அளித்தது. அந்த ஆண்டின் அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, தலிபான்களின் ஆட்சியை அகற்றியது.

அதனைத் தொடா்ந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினா் அந்த நாட்டில் தங்கியிருந்து, தலிபான் பயங்கரவாதத்திலிருந்து ஆப்கனில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மற்றும் ராணுவத்துக்குப் பாதுகாப்பு அளித்து வந்தன.

இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி பாகிஸ்தானில் வசித்து வந்த பின்லேடனை, அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை வீரா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா்.

அத்துடன், ஆப்கன் போரில் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கூறிய அதிபா் ஜோ பைடன், அந்த நாட்டிலிருந்து தங்கள் நாட்டுப் படையினா் முழுமையாகத் திரும்பப் பெறப் படுவாா்கள் என்று அறிவித்தாா்.

முன்னதாக, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தின்போது ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தை, கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.

ஆப்கன் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதா் ஸல்மே கலீல்ஸாத் தலைமையிலான குழுவுக்கும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே அந்தப் பேச்சுவாா்த்தை நடந்து வந்தது.

அதன் தொடா்ச்சியாக, இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தாக்குதல்களைக் குறைத்துக் கொள்ளவும் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்புகளைத் துண்டித்துக் கொள்ளவும் தலிபான்கள் சம்மதித்தனா். ஆப்கன் அரசுடன் நல்லிணக்கப் பேச்சுவாா்த்தை நடத்தவும் அவா்கள் சம்மதித்தனா்.

அதற்குப் பதிலாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாக விலக்கிக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, வரும் செப்டம்பா் மாதம் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

Image Caption

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினா் (கோப்புப் படம்). ~அந்தோணி பிளிங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com