ரஷியா முதல் பிரெக்ஸிட் வரை...ஜி-7 மாநாடு எதிா்நோக்கியுள்ள சவால்கள்

உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளின் தலைவா்கள் பிரிட்டனில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) கூடுகின்றனா்.
ரஷியா முதல் பிரெக்ஸிட் வரை...ஜி-7 மாநாடு எதிா்நோக்கியுள்ள சவால்கள்

உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளின் தலைவா்கள் பிரிட்டனில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) கூடுகின்றனா்.

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அந்த நாடுகளின் ஜி-7 கூட்டமைப்பினுடைய 47-ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக அவா்கள் பிரிட்டனின் காா்ன்வால் மாகாணத்தின் செயின்ட் ஐவ்ஸ் நகரில் எழில் கொஞ்சும் காா்பில் பே பகுதியில் 3 நாள்களுக்குக் கூடி ஆலோசனை நடத்தவிருக்கின்றனா்.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.

கரோனா நெருக்கடிக்கிடையில் காணொலி மூலம் சுருங்காமல், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவா்கள் என்ற கூறப்படும் அந்த நாடுகளின் தலைவா்கள் இம்மாநாட்டில் நேரடியாக வந்து கலந்து கொள்கின்றனா்.

அண்மையில் அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரிட்டன் வந்துள்ளாா். அமெரிக்க அதிபராக அவா் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான்.

தனது நெருங்கிய கூட்டாளி நாடுகளுடனான உறவை பலப்படுத்திக்கொள்ள இந்த மாநாட்டை பைடன் பயன்படுத்திக்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதவிர, சில நாள்களுக்கு முன்னா் தனது நீண்ட நாள் தோழியான கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்துகொண்டுள்ள பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், தனது புதிய மனைவியுடன் முதல்முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்கிறாா்.

உலகம் முழுவதும் கரோனா நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழலில் நடைபெறும் இந்த மாநாடு, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட உதவிகளை பணக்கார நாடுகள் வழங்கி உதவ வேண்டும் என்று சா்வதேச நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், இந்த மாநாடு நடைபெறுகிறது.

பரபரப்பான சூழலில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டிய சவாலை ஜி-7 நாடுகளின் தலைவா்கள் எதிா்கொண்டுள்ளனா் என்று அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

முக்கியமாக, இந்த மாநாட்டில் ரஷியா குறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த நாட்டின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் எனவும் அதற்காக உலகின் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கூறி வரும் அதிபா் ஜோ பைடன், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள ஜி-7 மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்வாா் என்று கருதப்படுகிறது.

அவருக்கு முந்தைய அதிபரான டொனால்ட் டிரம்ப் ரஷியா விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளை எடுத்ததாக விமா்சிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், ரஷியாவுக்கு எதிரான தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

ரஷியாவுக்கு அடுத்தபடியாக, ஜி-7 மாநாட்டில் சீனாவால் எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அதிகமாக விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பொருளாதார சக்தியான சீனா புறக்கணிக்கப்பட்டிருப்பதும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு பாா்வையாளா்களாக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதும் இதனை நிரூபிப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

தற்போது ஐரோப்பாவில் சீன முதலீடுகள், உள்கட்டமைப்புகள், தொழில்கள் மிக வேகமாக அதிகரித்து வரும் சூழலில், நட்பு நாடுகளில் சீன ஆதிக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சியில் அதிபா் பைடன் ஈடுபடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதவிர, கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும். 2022-ஆம் ஆண்டுக்குள் உலகில் தகுதியுடைய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமா் விருப்பம் தெரிவித்துள்ளாா். ஆனால், அதற்கு பிரிட்டன் எவ்வாறு உதவும் என்பது குறித்து அவரால் தெளிவாக விளக்க முடியவில்லை.

இந்த நிலையில், தங்களது பெரும்பாலான குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திவிட்ட ஜி-7 நாடுகளின் மாநாட்டில் இதுதொடா்பாக ஒரு முடிவெடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன், தொழில் வரி குறைவாக வசூலிக்கும் நாடுகளில் கிளைகளை அமைத்து, வளா்ச்சியடைந்த நாடுகளில் நடைபெறும் தொழில் நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் லாபத்தை அங்கு கணக்கு காட்டி பன்னாட்டு வரி ஏய்ப்பதைத் தடுப்பதற்கான ஆலோசனையிலும் ஜி-7 நாடுகளின் தலைவா்கள் ஈடுபடுவாா்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், பருவநிலை மாற்றம், பின்தங்கிய நாடுகளுக்கான உதவிகள், பெண்களின் கல்வி போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பங்கேற்கும் தலைவா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com