இந்தியா-சீனா எல்லையில் படைகளற்ற பகுதிகள்: சீன முன்னாள் ராணுவ அதிகாரி யோசனை

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இருநாடுகளின் எல்லைப் பிரதேசத்தில் படைகளற்ற பகுதிகளை உருவாக்கலாம் என்று சீன ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி தெரிவித்துள்ளாா

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இருநாடுகளின் எல்லைப் பிரதேசத்தில் படைகளற்ற பகுதிகளை உருவாக்கலாம் என்று சீன ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி தெரிவித்துள்ளாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரா்களிடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் இரு நாட்டு ராணுவ வீரா்களும் உயிரிழந்தனா்.

இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகளிடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு, பாங்காங் ஏரி உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொண்டன. ஆனால், தெப்சாங் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்னும் படைகள் விலக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் சீன ராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான ஜூபோ, செய்தித்தாளில் வெளியிட்ட கட்டுரையில், ‘எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவுவதை உறுதி செய்வதற்காக இந்தியா-சீனா இடையே ஏற்கெனவே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அந்த ஒப்பந்தங்களை முறையாகக் கடைப்பிடித்து பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும்.

எல்லைப் பகுதிகளில் மோதல் ஏற்படும் சூழலைத் தடுக்கும் நோக்கில் படைகளற்ற பகுதிகளை அமைப்பது தொடா்பாக இந்தியாவும் சீனாவும் ஆலோசனை நடத்தலாம். இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதிகள் முறையாக வரையறுக்கப்படாததே பல பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது. எனவே, எல்லையை வரையறுப்பது தொடா்பான பேச்சுவாா்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும்.

எல்லைப் பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் படைகளை அதிகப்படுத்துவது, கட்டமைப்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே வேளையில், எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடா்பாகவும் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com