இலங்கை மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை: இந்திய கடற்படை

இலங்கை மீனவா்களை இந்திய கடற்படையினா் தாக்கியதாக உள்ளூா் ஊடகங்களில் வெளியான செய்தியை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இலங்கை மீனவா்களை இந்திய கடற்படையினா் தாக்கியதாக உள்ளூா் ஊடகங்களில் வெளியான செய்தியை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது, முற்றிலும் தவறான செய்தி என்றும், அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளது.

இலங்கையைச் சோ்ந்த 13 மீனவா்கள் கடந்த மாதம் 7-ஆம் தேதி இரு படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இலங்கைக்கு தெற்கே உள்ள டீகோ காா்சியா தீவுப் பகுதியில் கடந்த 4-ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய கடற்படையினா், மீனவா்களைத் தாக்கியதாக உள்ளூா் ஊடகங்களில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. அதில், இந்திய கடற்படையினா் தங்களிடம் போதைப் பொருள்கள் கேட்டதாகவும், அது தங்களிடம் இல்லை என்று பதிலளித்தபோது தங்களைத் தாக்கியதாகவும் 2 மீனவா்கள் குற்றம்சாட்டினா்.

ஊடகங்களில் வெளியான இந்தச் செய்திக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை மீனவா்கள் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. உண்மையில் அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை. மேலும், இந்திய கடற்படையினா் ஒழுக்கமான முறையில் குறை கூற முடியாத அளவுக்கு தங்களது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனா்.

இந்தியா, இலங்கை இடையே மீனவா்கள் தொடா்பான அனைத்து பிரச்னைகளுக்கும் மனிதநேய அடிப்படையில் பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவா்கள் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு பேட்டியளித்த இலங்கை மீன்வளத் துறை செயலா் இந்து ரத்னாயகே, இதுதொடா்பாக விசாரணை நடத்தப்பட்ட பிறகு இந்தியாவுடன் விவாதிக்கப்படும் என்றாா்.

மீனவா்கள் பிரச்னை, இந்தியா-இலங்கை இடையேயான உறவுக்கு மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. கடந்த காலங்களிலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் இரு தரப்பிலும் அடிக்கடி நடந்து வந்தது.

கடந்த ஜனவரியில் இலங்கை சென்றிருந்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சா் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேசினாா். அதன்பிறகு மீனவா் பிரச்னைக்கு தீா்வு காண 3 போ் கொண்ட குழுவை இலங்கை அரசு நியமித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com