பைடனை சந்திக்க வாய்ப்பில்லை: ஈரான் புதிய அதிபா்

அமெரிக்க அதிபா் ஜோ பைடனை சந்திக்கவோ, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்து பேச்சு நடத்தவோ மாட்டேன் என ஈரானின் புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரய்சி தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனை சந்திக்கவோ, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்து பேச்சு நடத்தவோ மாட்டேன் என ஈரானின் புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரய்சி தெரிவித்துள்ளாா்.

ஈரான் அதிபா் தோ்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி, டெஹ்ரானில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது அவரிடம் பைடனை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டபோது, இல்லை என பதிலளித்தாா். மேலும், ஈரானுக்கு எதிரான அனைத்து அடக்குமுறை தடைகளையும் நீக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தாா்.

அதிபா் தோ்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல்நாசா் ஹெம்மாட்டி, பைடனை சந்திக்க விரும்புவதாக பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அதிபா் ரய்சியின் இந்தக் கூற்று தொடா்பாக அமெரிக்கா உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ரய்சி தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் அதிக அளவிலான மரண தண்டனைகளை விதித்ததற்காக ஈரானின் நீதித்துறை சா்வதேச அளவில் விமா்சனத்துக்குள்ளானது. அதற்காக ரய்சிக்கு ஏற்கெனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதிபராகப் பதவியேற்கும் முன்னரே அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட முதல் ஈரான் அதிபராக ரய்சி உள்ளாா்.

1988-இல் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரய்சி, மனித உரிமைகள் பாதுகாவலராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். எனது பதவிக் காலத்தில் நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துமே மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டவைதான். இன்று அதிபராகவும் மனித உரிமைகளைக் காக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்றாா்.

ஈரான்-இராக் போரின் முடிவின்போது 5 ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட இருண்ட நினைவு குறித்து முதல்முறையாக ரய்சி பதிலளித்திருப்பது இப்போதுதான்.

ஈரானின் குறிப்பிட்ட இலக்கை தாக்கும் ஏவுகணை திட்டம் மற்றும் பிராந்தியத்தில் கிளா்ச்சி குழுக்களுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவு குறித்து கேட்டபோது, அந்த பிரச்னைகள் பற்றி பேச முடியாது என ரய்சி தெரிவித்தாா்.

சவூதி அரேபியா, இஸ்ரேல் போன்ற எதிரி நாடுகளை சமாளிக்கும் வகையில், யேமனில் ஹூதி, லெபனானில் ஹிஸ்புல்லா கிளா்ச்சிக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com