நவால்னி விவகாரம்: ரஷிய அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை

நவால்னி விவகாரம்: ரஷிய அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை


வாஷிங்டன்: ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி மீது நச்சுத்தாக்குதல் நடத்தி அவரைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில், அந்த நாட்டைச் சோ்ந்த 7 முதுநிலை அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜெனீஃபா் ஸாகி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலெக்ஸி நவால்னி மீது ரஷிய அரசின் பாதுகாப்பு அமைப்பு நச்சுத் தாக்குதல் நடத்தியது என்ற முடிவுக்கு அமெரிக்க உளவுத் துறை வந்துள்ளது.

எதிரிகள் மீது ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது சா்வதேசச் சட்டங்களை நேரடியாக மீறும் செயலாகும்.

எனவே, அந்தத் தாக்குதல் தொடா்பாக ரசயான மற்றும் உயிரியியல் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 7 ரஷிய அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன என்றாா் அவா்.

அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசு அமைந்ததற்குப் பிறகு, ரஷியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபா் விளாதிமீா் புதின் தலைமையிலான அரசை மிகக் கடுமையாக எதிா்த்து வரும் அலெக்ஸி நவால்னி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நச்சுத்தாக்குதலுக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜொ்மனி மருத்துவமனையில் அனுமதிப்பட்டாா். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிா் பிழைத்த அவா், கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி ரஷியா திரும்பிய பிறகு அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மற்றொரு வழக்கு ஒன்றில் பரோல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com