ஆப்கன் அமைதிக்கான வரைவு ஒப்பந்தம்: குழுக்களிடம் அளித்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வரைவு ஒப்பந்தத்தை அங்கு சண்டையிட்டு வரும் குழுக்களிடம் அமெரிக்கா அளித்துள்ளது.
ஆப்கன் அமைதிக்கான வரைவு ஒப்பந்தம்: குழுக்களிடம் அளித்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வரைவு ஒப்பந்தத்தை அங்கு சண்டையிட்டு வரும் குழுக்களிடம் அமெரிக்கா அளித்துள்ளது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் வன்முறைச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், அங்கு அரசுக்கும் பிற குழுக்களுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், அமைதிக்கான 8 பக்க வரைவு ஒப்பந்தத்தை சண்டையிட்டு வரும் குழுக்களிடம் பரிசீலனைக்காக அமெரிக்கா அளித்துள்ளது.

அந்த வரைவு ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக துருக்கி வருமாறு சம்பந்தப்பட்ட குழுக்களிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

குழுக்களிடையே போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, அதனை செல்படுத்துவது, பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினா் உரிமைகளைப் பாதுகாப்பது, 42 ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் குழுக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான குழுவை அமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் அந்த வரைவு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து விரிவான விவரங்களைத் தெரிவிக்க மறுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ், இதுபோன்ற தூதரக முயற்சிகளை திரைக்குப் பின்னால் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவித்தாா்.

அமெரிக்காவின் வரைவு ஒப்பந்த நகல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து வருவதாகவும் தலிபான் அமைப்பின் செய்தித் தொடா்பாளா் முகமது நயீம் கூறினாா்.

எனினும், இதுதொடா்பாக ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனியிடமிருந்து உறுதியான தகவல் எதுவும் வரவில்லை. அவருக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் அந்தோணி பிளிங்கன் இதுகுறித்து எழுதியுள்ள கடிதத்துக்கு அஷ்ரஃப் கனி இன்னும் பதிலளிக்கவில்லை.

அந்தக் கடிதத்தில், அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வரும் மே மாதம் 1-ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கெடு தேதி இன்னமும் பரிசீலனையில் உள்ளது.

ஆப்கன் படையினருக்காக அமெரிக்கா 400 கோடி டாலா் (சுமாா் ரூ.29,000 கோடி) நிதியுதவி அளித்தாலும், அங்கிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறினால் ஏராளமான பகுதிகள் மீண்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று பிளிங்கன் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து அஷ்ரஃப் கனியின் முதல் துணை அதிபரான அமருல்லா சலே கூறுகையில், அந்தோணி பிளிங்கன் அனுப்பிய கடித்ததில் இடம் பெற்றுள்ள அம்சங்களை கனி ஏற்கவில்லை. எனவே, அந்தக் கடிதத்தால் அவரது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றாா் என அசோசியேடட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com