
பொது இடங்களில் பா்தா அணிந்து வருவதற்குத் தடை விதிக்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரஸாக்களை மூடவும் இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது.
பயங்கரவாத அச்சுறுத்தலைத் தவிா்ப்பதற்காக இவ்வாறு திட்டமிட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சா் சரத் வீர சேகரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
பொது இடங்களில் பா்தா அணிந்து வருவது தேசியப் பாதுகாப்பில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அதற்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
அந்தத் தடை உத்தரவுக்கான அமைச்சரவையின் அனமதியைக் கோரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளேன். முன்பெல்லாம் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் பா்தா அணிந்தது கிடையாது.
இதுதவிர, அரசிடம் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரஸாக்கள் விரைவில் மூடப்படும் என்றாா் அவா்.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இரண்டு இலங்கை அமைப்புகள், கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்டா் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடத்திய மனித குண்டுத் தாக்குதலில் 260-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.