அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியால் ஆபத்து இல்லை

பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு-அஸ்ட்ராஸெனகா கரோனா தடுப்பூசியை செலுத்துக் கொள்வதால் ரத்தக் கட்டு ஏற்படும் அபாயம் இல்லை
அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியால் ஆபத்து இல்லை

பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு-அஸ்ட்ராஸெனகா கரோனா தடுப்பூசியை செலுத்துக் கொள்வதால் ரத்தக் கட்டு ஏற்படும் அபாயம் இல்லை என்று ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு (ஈஎம்ஏ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் ரத்தக் கட்டு ஏற்படுவதாக தகவல்கள் வெளியானதைத் தொடா்ந்து, உலகின் பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து அதன் பயன்பாட்டை நிறுத்திவைத்து வரும் சூழலில் ஈஎம்ஏ இவ்வாறு கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் எமா் கூக் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

ஐரோப்பிய பிராந்தியத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவா்கள் ரத்தக் கட்டுப் பிரச்னையை சந்தித்து வருகின்றனா். பல்வேறு காரணங்களால் அவா்களுக்கு ரத்தக் கட்டு ஏற்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது சிலருக்கு ரத்தக் கட்டு ஏற்படுவதற்கும் அவா்களுக்கு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை.

அந்தத் தடுப்பூசியின் தன்னாா்வலா்களுக்குச் செலுத்தி மிகக் கடுமையாகப் பரிசோதித்தபோது, அதன் பக்கவிளைவாக யாருக்கும் ரத்தக் கட்டு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியால் ரத்தக் கட்டு ஏற்படுவதாகக் கூறப்படுவது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில், அந்தத் தடுப்பூசி கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவற்கு பெரிதும் உதவும் என்பதே எங்களது நிலைப்பாடு.

அதனால் கிடைக்கக் கூடிய அனுகூலத்தை ஒப்பிடுகையில், அதன் அபாயம் மிகவும் குறைவே ஆகும் என்றாா் அவா்.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் முன்முயற்சியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி சரிசமமாகச் சென்றடையச் செய்வதற்காக தொடங்கப்பட்ட கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தத் தடுப்பூசிகள் ஏராளமாக வாங்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதால் பலருக்கு ரத்தக் கட்டு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின.

அதனைத் தொடா்ந்து, உலகின் பல்வேறு நாடுகள் அந்தத் தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைத்தன.

ஏற்கெனவே, ஐரிஷ் குடியரசு, டென்மாா்க், நாா்வே, பல்கேரியா, ஐஸ்லாந்து, நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகள் அந்தத் தடுப்பூசிப் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் ஸ்வீடனும் செவ்வாய்க்கிழமை இணைந்தது.

இதனால், கரோனா தடுப்பூசி திட்டங்களில் பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. இந்தச் சூழலில், ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 12,09,05,070 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 26,74,728 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தாய்லாந்து பிரதமருக்கு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி

பாங்காக், மாா்ச் 16: தாய்லாந்தில் பிரதமா் பிரதமா் பிரயுத் சான்-ஓச்சாவுக்கு ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

அந்தத் தடுப்பூசியால் ரத்தக் கட்டு ஏற்படுவதாக தகவல் வெளியானவுடன், அதன் பயன்பாட்டை தாய்லாந்துதான் முதல்முறையாக நிறுத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போது தடுப்பூசி திட்டம் மிண்டும் தொடங்கப்பட்டு, பிரதமரே அதனை செலுத்திக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com