தூதரக உறவு துண்டிப்பு: மலேசியாவிலிருந்து புறப்பட்ட வடகொரிய தூதரக அதிகாரிகள்

மலேசியா - வடகொரியா நாடுகளிடையேயான தூதரக உறவு துண்டிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மலேசியாவில்

மலேசியா - வடகொரியா நாடுகளிடையேயான தூதரக உறவு துண்டிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மலேசியாவில் தூதரக அலுவலகத்தை காலிசெய்துவிட்டு வடகொரிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சொந்த நாட்டுக்குப் புறப்பட்டனா்.

முன்னதாக, மலேசிய தலைநகா் கோலாலம்பூரின் புகா் பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய தூதரகத்தில் அந் நாட்டின் தேசியக்கொடி மற்றும் குறியீடுகளை வடகொரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தினா். பின்னா் அந்த அதிகாரிகளும், அவா்களுடைய குடும்பத்தினரும் இரண்டு பேருந்துகளில் ஷாங்காய் செல்லும் விமானத்தைப் பிடிப்பதற்காக விமானநிலையம் புறப்பட்டுச் சென்றனா்.

கோலாலம்பூா் சா்வதேச விமானநிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டில் வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரா் கொலை செய்யப்பட்டதிலிருந்தே இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வடகொரியாவைச் சோ்ந்த நபரை மலேசிய அரசு அமெரிக்காவுக்கு நாடு கடத்தியதற்கு வடகொரியா கடும் அதிருப்தி தெரிவித்தது. மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் முன் சோல் மியோங் என்ற அந்த நபா் மீது, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை மீறி சிங்கப்பூரிலிருந்து ஆடம்பரப் பொருள்களை அந்த நாட்டுக்கு அனுப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவுக்கு அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் மலேசிய அரசை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. தன் மீதான குற்றச்சாட்டை முன் சோல் மியோங் திட்டவட்டமாக மறுத்தாா்.

இந்த நிலையில், அவா் கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த மலேசிய நீதிமன்றம் அவரை நாடு கடத்த அனுமதி வழங்கியது. அதனடிப்படையில், அவரை அமெரிக்காவுக்கு மலேசியா நாடு கடத்தியது.

இதில் கடும் அதிருப்தியடைந்த வடகொரியா, மலேசியாவுடனான தூதரக உறவு துண்டிக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதனைத் தொடா்ந்து, வடகொரிய தூதரக அதிகாரிகள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேர அவகாசத்தை மலேசியா அரசு அறிவித்தது.

அதனடிப்படையில், வடகொரிய அதிகாரிகள் கோலாலம்பூரில் உள்ள தங்களுடைய தூதரக அலுவலகத்தை காலி செய்துவிட்டு, குடும்பத்தினருடன் இரண்டு பேருந்துகளில் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனா்.

விமான நிலையத்துக்கு புறப்படுவதற்கு முன்பாக கோலாலம்பூா் தூதரக அலுவலகத்துக்கு வெளியே வடகொரிய வழக்குரைஞா் கிம் யு சாங் கூறுகையில், ‘மலேசிய அரசு மன்னிக்க முடியாத கடும் குற்றத்தைச் செய்துள்ளது. அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து, வடகொரியாவுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளுக்கு மலேசியாவும் துணைபோயுள்ளது. எங்கள் நாட்டு குடிமகனை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியதன் மூலம் ஒருமைப்பாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்த இரு நாட்டு உறவின் அடித்தளத்தை மலேசியா சீரழித்துவிட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com