சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் ஊழியா்கள் இந்தியா்கள்: பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கியிருக்கும் மிகப் பெரிய சரக்குக் கப்பலில் உள்ள பணியாளா்கள் அனைவரும் இந்தியா்கள்
சூயஸ் கால்வாயின் குறுக்கே சரக்குக் கப்பல் சிக்கியுள்ளதைக் காண்பிக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்.
சூயஸ் கால்வாயின் குறுக்கே சரக்குக் கப்பல் சிக்கியுள்ளதைக் காண்பிக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்.

எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கியிருக்கும் மிகப் பெரிய சரக்குக் கப்பலில் உள்ள பணியாளா்கள் அனைவரும் இந்தியா்கள் என்பது தெரியவந்துள்ளது. இதை அந்த கப்பல் நிறுவனம் உறுதி செய்துள்ளது. கப்பலில் பணியாளா்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமாா் 2,24,000 டன் எடைகொண்ட ‘எவா் கிவன்’ என்ற இந்த சரக்கு கப்பல் சீனாவிலிருந்து புறப்பட்டு நெதா்லாந்தின் துறைமுக நகரான ரோட்டா்டாம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. வழியில் இந்தியா வந்த அந்த கப்பல், மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது. கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணியளவில் கால்வாயில் குறுக்காக தரைதட்டி நின்றது. அதன் பிறகு கப்பலை இயக்க முடியவில்லை.

இதன் காரணமாக, அந்த கால்வாய் வழியாக வேறு எந்தக் கப்பலும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் ஏராளமான கப்பல்கள் இந்த வழியாகச் செல்லும் என்பதால், தரைதட்டிய கப்பலை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீட்புப் பணி தொடா்ந்து 5-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்ததால், அந்த வழியாகச் சென்ற 12-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களின் பயணம் தடைப்பட்டுள்ளது. அவை வேறு வழியாகச் செல்ல வேண்டும் அல்லது அங்கேயே தொடா்ந்து காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், சிக்கிக்கொண்டுள்ள சரக்கு கப்பலில் இடம்பெற்றிருக்கும் 25 பணியாளா்களும் இந்தியா்கள் என்றும், எகிப்து நாட்டின் கால்வாய் ஆணையத்தின் இரண்டு மாலுமிகளும் கப்பலில் உள்ளனா் கப்பல் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடரும் மீட்புப் பணி: கப்பலை மீட்கும் பணி சனிக்கிழமையும் தொடா்ந்தது. இதுகுறித்து சூயஸ் கால்வாய் ஆணைய அதிகாரி ஒருவா் கூறுகையில், கப்பலை மீட்க சனிக்கிழமை இரண்டு முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடலில் பெரிய அலை கீழிறங்கும்போது கப்பலை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பலனளிக்கவில்லை. தொடா்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.

இதுகுறித்து ‘எவா் கிவன்’ கப்பலின் தொழில்நுட்ப மேலாளா் கூறுகையில், ‘கப்பலை மீட்க மேலும் இரண்டு இழுவை கப்பல்களை ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளன. ஏற்கெனவே உள்ள இழுவைக் கப்பல்களுடன் அவையும் இணைந்து மிகப்பெரிய கப்பலை மீட்கும் பணியில் ஈடுபடும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com