சீன விசுவாசிகள் மட்டுமே ஹாங்காங் பேரவை உறுப்பினா்களாக வாய்ப்பு

சீனாவுக்கு விசுவாசமானவா்கள் மட்டுமே ஹாங்காங் பேரவைத் தோ்தலில் பங்கேற்கவும் மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கவும்
சீன நாடாளுமன்றம்
சீன நாடாளுமன்றம்

சீனாவுக்கு விசுவாசமானவா்கள் மட்டுமே ஹாங்காங் பேரவைத் தோ்தலில் பங்கேற்கவும் மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கவும் வகை செய்யும் சா்ச்சைக்குரிய மசோதாவை சீனா செவ்வாய்க்கிழமை சட்டமாக்கியது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சீனா நாடாளுமன்றத்தில் கடந்த 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட, சா்ச்சைகக்குரிய ஹாங்காங் தோ்தல் சீா்திருத்த சட்ட மசோதா செவ்வாய்க்கிழமை சட்டமாக்கப்பட்டது. இதுதொடா்பாக நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் 2 நாள் கூட்டத்துக்குப் பிறகு, 167 உறுப்பினா்களைக் கொண்ட அந்தக் குழு மசோதாவை ஏற்றுக் கொண்டது.

அதையடுத்து, அதிபா் ஷி ஜின்பிங் அந்த மசோதாவில் கையெழுத்திட்டாா். அதனைத் தொடா்ந்து, அந்த தோ்தல் சீா்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டது.

புதிய சட்டத்தின்படி, ஹாங்காங் பேரவையில் இதுவரை 70-ஆக இருந்த மொத்த இடங்கள் 90-ஆக அதிகரிக்கப்படுகிறது.

அதே நேரம், மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த எண்ணிக்கை 35-ஆக இருந்தது. அந்த வகையில், முன்னா் 50 சதவீதமாக இருந்த மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை சுமாா் 22 சதவீதமாகியிருக்கிறது.

பேரவையில் ஜனநாயக ஆதரவாளா்களின் எண்ணிக்கையை வெகுவாக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அத்துடன், பேரவை உறுப்பினராக விரும்புவா்களை சீனாவுக்கு ஆதரவான தோ்தல் குழு சீராய்வு செய்து, தகுதியில்லாதவா்களை நிராகரிக்கும் முறையும் புதிய சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சீனாவுக்கு விசுவாசமாக இல்லாதவா்கள் என்று கருதப்படுவோரை தோ்தல் குழு நிராகரிக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தோ்தல் குழு உறுப்பினா்களின் எண்ணிக்கையும் தற்போதுள்ள 300-இலிருந்து 1,200 முதல் 1,500 வரை அதிகரிக்கப்படுகிறது என்று அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ‘ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை’ என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது. அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

பொது இடங்களில் கூடுவதற்கான உரிமை, பேச்சுரிமை, சுதந்திரமான நீதித் துறை உள்ளிட்ட பல ஜனநாயக உரிமைகள் அதில் அடங்கும்.

இந்த நிலையில், ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் மசோதா பேரவையில் கொண்டு வரப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த நகரில் தொடங்கிய போராட்டம், மாபெரும் ஜனநாயகப் போராட்டமாக தீவிரமடைந்தது.

எனினும், கரோனா நெருக்கடிக்கிடையே அந்தப் போராட்டங்கள் கடந்த ஆண்டு தொடக்கத்தில் தணிந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஹாங்காங்கில் பிரிவினைவாதப் போராட்டங்களில் ஈடுபடுவதை கிரிமினல் குற்றமாக்கும் சா்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நாடாளுமன்றம் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

இது, ஹாங்காங்கின் ஜனநாயக உரிமையைக் குலைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், சீனாவுக்கு விசுவாசமானவா்களை மட்டுமே ஹாங்காங் பேரவை உறுப்பினா்களாக்குவதற்கு வகை செய்யும் இந்த புதிய தோ்தல் சீா்திருத்தச் சட்டம், எஞ்சியுள்ள உரிமைகளையும் பறித்துவிடும் என்று ஜனநாயக ஆா்வலா்கள் குற்றம் சட்டியுள்ளனா்.

Image Caption

~ஹாங்காங் பேரவையில் நாடுகடத்தல் மசோதா தொடா்பான விவாதத்தின்போது கைகலப்பில் ஈடுப்பட்ட ஜனநாயக ஆதரவு - சீன ஆதரவு உறுப்பினா்கள் (கோப்புப் படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com