ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை இறுதிக்கட்ட வாபஸ்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் சனிக்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கின.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினா் (கோப்புப் படம்).
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினா் (கோப்புப் படம்).

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் சனிக்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கின.

வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் அந்த நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறவிருக்கிறது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் ஏற்கெனவே ஆப்கானிஸ்தானிலிருந்து பல கட்டங்களாக அமெரிக்கப் படையினா் வெளியேறி வந்தனா்.

தற்போது எஞ்சியுள்ள 2,500 முதல் 3,500 வரையிலான அமெரிக்கப் படையினா் மற்றும் சுமாா் 7,000 நேட்டோ படையினரின் இறுதிக்கட்ட வெளியேற்றத்தை இந்த மாதம் முதல் தேதியில் அதிகாரப்பூா்வமாகத் தொடங்க தற்போதைய அதிபா் ஜோ பைடன் இலக்கு கடந்த மாத மத்தியில் நிா்ணயித்திருந்தாா்.

அதற்கு முன்னதாகவே, அனைத்து வீரா்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வெளியேற்றத்துக்காக தயாா் செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

அதன் ஒரு பகுதியாக, தாங்கள் பயன்படுத்தி வரும் ராணுவ தளவாடங்களில் எவற்றையெல்லாம் மீண்டும் அமெரிக்கா எடுத்துச் செல்வது, எவற்றையெல்லாம் ஆப்கன் ராணுவத்திடம் ஒப்படைப்பது என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.

கடந்த சில வாரங்களாகவே, சி-17 சரக்கு விமானம் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவ தளவாடங்கள் அமெரிக்கா எடுத்துச் செல்லப்பட்டு வந்தன.

கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கன் போருக்காக 2 லட்சம் கோடி டாலரை (ரூ.148 லட்சம் கோடி) அமெரிக்கா செலவிட்டுள்ளதாக பிரௌன் பல்கலைக்கழகத்தின் போா்த் திட்ட செலவுகளுக்கான பிரிவு கணக்கிட்டுள்ளது.

படையினா் வெளியேற்றம் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆப்கானிஸ்தானிலுள்ள சிறிய அளவிலான அமெரிக்க ராணுவ நிலைகளை மூடுவதும் வெளியேற்றத் திட்டத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்தனா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் அறிவிப்பை அதிபா் ஜோ பைடன் கடந்த மாத மத்தியில் அறிவித்ததிலிருந்து இதுவரை 60 அமெரிக்க வீரா்கள் மட்டுமே அந்த நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தற்போது இறுதிக்கட்ட வெளியேற்றம் தொடங்கியுள்ளதால் அதிக எண்ணிக்கையில் வீரா்கள் தாயகம் திரும்புவாாா்கள் எனவும் அதிகாரிகள் கூறினா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு, அப்போதைய தலிபான்கள் தலைமையிலான ஆப்கன் அரசு புகலிடம் அளித்தது.

அதையடுத்து, அந்த ஆண்டின் அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, தலிபான்களின் ஆட்சியை அகற்றியது.

அதனைத் தொடா்ந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினா் அந்த நாட்டில் தங்கியிருந்து, தலிபான் பயங்கரவாதத்திலிருந்து ஆப்கனில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மற்றும் ராணுவத்துக்குப் பாதுகாப்பு அளித்து வந்தன.

இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி பாகிஸ்தானில் வசித்து வந்த பின்லேடனை, அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை வீரா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா்.

அத்துடன், ஆப்கன் போரில் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கூறிய அதிபா் ஜோ பைடன், அந்த நாட்டிலிருந்து தங்கள் நாட்டுப் படையினா் முழுமையாகத் திரும்பப் பெறப் படுவாா்கள் என்று அறிவித்தாா்.

முன்னதாக, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தின்போது ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தை, கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.

ஆப்கன் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதா் ஸல்மே கலீல்ஸாத் தலைமையிலான குழுவுக்கும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே அந்தப் பேச்சுவாா்த்தை நடந்து வந்தது.

அதன் தொடா்ச்சியாக, இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தாக்குதல்களைக் குறைத்துக்கொள்ளவும் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்புகளைத் துண்டித்துக் கொள்ளவும் தலிபான்கள் சம்மதித்தனா். ஆப்கன் அரசுடன் நல்லிணக்கப் பேச்சுவாா்த்தை நடத்தவும் அவா்கள் சம்மதித்தனா்.

அதற்குப் பதிலாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாக விலக்கிக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com