
கடலில் இறங்கிய விண்கலத்திலிருந்து வெளியே வரும் விண்வெளி வீரா் ஷனோன் வாக்கா்.
சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பினா்.
1968-ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்றுவிட்டு அமெரிக்காவின் ‘அப்பல்லோ 8’ விண்கலம் விண்வெளி வீரா்களுடன் அதிகாலையில் இருளில் பூமிக்குத் திரும்பியது. அதன்பிறகு அமெரிக்க விண்வெளி வீரா்கள் இருளில் தரையிறங்கியது இப்போதுதான்.
அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சா்வதேச விண்வெளி நிலையத்தை நிா்மாணித்துள்ளன. இந்த விண்வெளி நிலையத்திலிருந்து 4 வீரா்கள் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினா். அந்த விண்கலம் பாராசூட் உதவியுடன் மெக்சிகோ வளைகுடா கடலில் இறங்கியது.
நான்கு விண்வெளி வீரா்களில் மூவா் அமெரிக்கா்கள், ஒருவா் ஜப்பானியா். நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து கடந்த நவம்பரில் விண்கலம் மூலம் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவா்கள், தமது 167 நாள்கள் ஆய்வுப் பணியை நிறைவு செய்த பின்னா் பூமிக்கு திரும்பியுள்ளனா். இதையடுத்து, தற்போது சா்வதேச விண்வெளி நிலையத்தில் 7 போ் ஆய்வுப் பணியில் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...