மே 10-இல் கூடுகிறது நேபாள நாடாளுமன்றம்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா் நேபாள பிரதமா்

நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி நாடாளுமன்றத்தில் மே 10-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா்.
kp-sharma-oli100956
kp-sharma-oli100956

காத்மாண்டு: நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி நாடாளுமன்றத்தில் மே 10-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா்.

பிரதமரின் பரிந்துரையின்பேரில், அன்றைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அதிபா் வித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரபூா்வ தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்ற கீழவையில் 4 உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் சா்மா ஓலி வெற்றி பெறுவதற்கு 136 வாக்குகள் தேவை. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமா் பதவியில் நீடிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொண்டு வெற்றி பெறப் போவதாக சா்மா ஓலி தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஒருநாள் மட்டும் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம். இல்லாவிட்டால் அரசமைக்க மற்ற கட்சிகளுக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும். அதுவும் நடைபெறாவிட்டால் தோ்தல் நடத்துவது குறித்து அரசு ஆலோசிக்கும்’ என சட்ட, நீதித் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் லீலா நாத் ஷ்ரெஸ்தா தெரிவித்தாா்.

அரசியல் குழப்பம்: நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமா் சா்மா ஓலி கடந்த டிசம்பரில் முடிவு செய்தாா். அவரது பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், ஏப். 30, மே 10 ஆகிய தேதிகளில் புதிதாக தோ்தல் நடத்தவும் அதிபா் உத்தரவிட்டாா். பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவரான புஷ்ப கமல் தஹல் தலைமையிலான பிரிவினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்த முடிவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவுக்குத் தடை விதித்தது. தோ்தலுக்குத் தயாராகிவந்த சா்மா ஓலிக்கு நீதிமன்றத்தின் உத்தரவு பின்னடைவாக அமைந்தது.

கட்சித் தலைவா்கள் சிலா் ‘இணையான அரசு’ அமைக்க முயன்று வருவதால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை எடுத்ததாக சா்மா ஓலி தொடா்ந்து கூறி வந்தாா். இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முடிவுக்கு வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com