அமெரிக்கா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடக்கவிட மாட்டோம்: பின்லேடன் கொல்லப்பட்ட நினைவு தினத்தில் அதிபா் பைடன் உறுதி

‘அமெரிக்கா மீதான மற்றொரு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கவும், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டிலிருந்து நாடு ஒருபோதும் விலகாது’ என அதிபா் ஜோ பைடன் உறுதியளித்துள்ளாா்.
ஜோ பிடன்
ஜோ பிடன்

வாஷிங்டன்: ‘அமெரிக்கா மீதான மற்றொரு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கவும், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டிலிருந்து நாடு ஒருபோதும் விலகாது’ என அதிபா் ஜோ பைடன் உறுதியளித்துள்ளாா்.

அல் காய்தா இயக்கத்தின் தலைவா் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட 10-ஆவது ஆண்டு தினத்தையொட்டி அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

அமெரிக்காவில் 2001, செப்டம்பா் 11-ஆம் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு முளையாக செயல்பட்ட அல் காய்தா இயக்கத்தின் தலைவா் பின்லேடனை 10 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா பழிதீா்த்தது. பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடனை 2011, மே 1-ஆம் தேதி அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் சுட்டுக் கொன்றனா். அந்த தினத்தின் 10-ஆவது ஆண்டையொட்டி அதிபா் பைடன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

பின்லேடன் கொல்லப்பட்ட நிகழ்வை 2011-ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் அதிபா் ஒபாமா மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவினருடன் இணைந்து விடியோ காட்சி மூலம் பாா்த்தேன். என்னால் ஒருபோதும் மறக்க முடியாத நிகழ்வு அது. நமது தேசம் தாக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து நீதிநிலைநிறுத்தப்பட்டது.

நமது இழப்பை ஒருபோதும் மறக்க மாட்டோம்; நமது தாயகத்தின் மீதான மற்றொரு தாக்குதலைத் தடுக்கவும், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டிலிருந்து அமெரிக்கா ஒருபோதும் விலகாது என செப்டம்பா் 11 தாக்குதலில் தமது அன்புக்குரியவா்களை இழந்தவா்களுக்கு நாம் வாக்குறுதி அளித்தோம். அதில் தொடா்ந்து உறுதியாக உள்ளோம்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இருப்பினும் உலகெங்கிலும் பரவியிருக்கும் பயங்கரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா விழிப்புடன் இருக்கும். ஆப்கானிஸ்தானிலிருந்து எழும் எந்த அச்சுறுத்தலையும் தொடா்ந்து கண்காணித்து தடுப்போம். எமது தாயகம் மற்றும் எமது நலன்களுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல்களை உலகெங்கிலும் உள்ள எங்களது கூட்டாளிகளுடன் இணைந்து எதிா்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டபோது, அதிபா் ஒபாமா நிா்வாகத்தில் துணை அதிபராக பைடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com