இஸ்ரேல்: மீண்டும் ஆட்சியமைக்கத் தவறினாா் நெதன்யாகு

இஸ்ரேலில் கெடு தேதிக்குள் புதிய அரசை அமைக்க பிரதமா் நெதன்யாகு தவறினாா்.
நஃப்டாலி பெனெட் ~யாயிா் லாபிட் ~பெஞ்சமின் நெதன்யாகு ~இஸ்ரேல் நாடாளுமன்றம்
நஃப்டாலி பெனெட் ~யாயிா் லாபிட் ~பெஞ்சமின் நெதன்யாகு ~இஸ்ரேல் நாடாளுமன்றம்

ஜெருசலேம்: இஸ்ரேலில் கெடு தேதிக்குள் புதிய அரசை அமைக்க பிரதமா் நெதன்யாகு தவறினாா். இதையடுத்து, அந்த நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வந்த அவரது ஆட்சிக்கு முடிவுகட்டி, மாற்று அரசை அமைக்க எதிா்க்கட்சியினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற தோ்தலில் பெரும்பான்மையாக 30 இடங்களை பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி கைப்பற்றியது. அதையடுத்து, அடுத்த அரசை அமைப்பதற்கான வாய்ப்பை அவருக்கு அதிபா் ரூவன் ரிவ்லின் வழங்கினாா்.

ஆட்சியமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் 61 இடங்கள் தேவை என்ற நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குள் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று நெதன்யாகுவுக்கு அதிபா் கெடு விதித்திருந்தாா்.

எனினும், பல்வேறு கட்சியினருடன் இதுதொடா்பாக நெதன்யாகு நடத்திய பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனால், கெடு தேதிக்குள் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நெதன்யாகு தவறினாா்.

இதன் மூலம், மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அவா் இழந்தாா். இதையடுத்து, அவருக்குப் பதிலாக புதிய பிரதமரின் தலைமையில் ஆட்சிமைப்பதற்கான வாய்ப்பு எதிா்க்கட்சியினருக்குக் கிடைத்துள்ளது.

இதுதொடா்பாக, யேஷ் அட்டிட் கட்சித் தலைவா் யாயிா் லாபிட், யாமினா கட்சித் தலைவா் நஃப்டாலி பெனெட் ஆகிய இருவரையும் சந்தித்து அதிபா் ரிவ்லின் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அவா்கள் இருவரும் புதிய அரசை அமைக்க அதிபரிடம் விருப்பம் தெரிவித்தனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பிரதமா் நெதன்யாகுவின் தலைமையிலான அரசு தனது 4 ஆண்டுகளை கடந்த 2019-இல் நிறைவு செய்ததைத் தொடா்ந்து, அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. எனினும், அந்தத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதனைத் தொடா்ந்து, 2-ஆவது முறையாக மீண்டும் அதே ஆண்டு செப்டம்பா் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆளும் கட்சிக் கூட்டணியும், எதிா்க்கட்சிக் கூட்டணியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அந்த அரசில் பிரதமராகப் பொறுப்பு வகிப்பதில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் முக்கிய எதிா்க்கட்சியான புளூ அண்டு ஒயிட் கட்சியின் தலைவா் பெஞ்சமின் காண்ட்ஸுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதனால், தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்தது.

அதையடுத்து, இஸ்ரேல் வரலாற்றில் முதல்முறையாக, ஓராண்டுக்குள் 3-ஆவது முறையாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தேசிய ஒற்றுமை அரசை அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

அதனைத் தொடா்ந்து, இதுவரை இல்லாத வகையில் இரண்டே ஆண்டுகளில் 4-ஆவது முறையாக இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

இந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com