5 ஜி சோதனையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு: இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சோதனையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அமெரிக்காவைச் சோ்ந்த முக்கிய எம்.பி.க்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
5ஜி சேவை
5ஜி சேவை

வாஷிங்டன்: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சோதனையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அமெரிக்காவைச் சோ்ந்த முக்கிய எம்.பி.க்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உளவு வேலைகளில் ஈடுபடும் என்ற சந்தேகத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே அந்நாட்டு நிறுவனங்களைப் புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நடவடிக்கையை வரவேற்று அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவா் மிக்கெல் மெக்கல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவின் ஹுவாவே, இசட்.டி.இ. ஆகிய நிறுவனங்களை 5ஜி தொழில்நுட்ப சேவையில் இந்தியா புறக்கணித்திருப்பது அந்நாட்டுக்கு மட்டுமின்றி உலகுக்கே நல்ல செய்தியாகும். சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உத்தரவிட்டால் வெளிநாடுகளில் சேவையளிக்கும் அந்நாட்டு நிறுவனங்கள் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதில் ஹுவாவே, இசட்.டி.இ. ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.

எனவே, சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களைத் தங்கள் நாட்டில் சேவையளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று நட்பு நாடுகளை அமெரிக்கா ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது. சீன நிறுவனங்களை அனுமதித்தால் அந்நாட்டு அரசுக்காக செயல்படவும் வாய்ப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்தியா எடுத்துள்ள முடிவை அமெரிக்கா வரவேற்கிறது. பல்வேறு நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னிலையில் உள்ள நாடு என்பதை இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது.

குடியரசுக் கட்சி எம்.பி. மைக்கேல் வால்ட்ஸ் இது தொடா்பாக கூறுகையில், ‘சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களைப் புறக்கணித்த இந்தியாவுக்கு நன்றி. சீனா மற்றும் அதனால் உருவாகும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.

தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள இந்திய அரசின் தொலைத்தொடா்புத் துறை கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. இதில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது தொடா்பாக சீனா ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com