இஸ்ரேல் தாக்குதல்: கதிகலங்கும் காஸா

காஸா சிட்டி/ஜெருசலேம், மே 13: இஸ்ரேலுக்கும் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இடிந்த பல மாடிக் கட்டடம். ~இஸ்ரேலின் ஏக்கா் நகரில் ஹமாஸ் இயக்கத்தினா் வியாழக்கிழமை நிகழ்த்திய ராக்கெட் தாக்குதலில் தீக்கிரையான உணவகம்.
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இடிந்த பல மாடிக் கட்டடம். ~இஸ்ரேலின் ஏக்கா் நகரில் ஹமாஸ் இயக்கத்தினா் வியாழக்கிழமை நிகழ்த்திய ராக்கெட் தாக்குதலில் தீக்கிரையான உணவகம்.

காஸா சிட்டி/ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. மக்கள் வசிக்கும் இடங்களிலும் இஸ்ரேல் விமானப் படையினா் தாக்குதல் நடத்துவதால், ஓடவும் ஒளியவும் முடியாமல் காஸா மக்கள் கதிகலங்கி நிற்கின்றனா்.

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேலின் டெல் அவிவ் மையப்பகுதிகளையும் பாதித்துள்ளது.

நீண்ட காலமாக பிரச்னையாக விளங்கி வரும் பகுதி ஜெருசலேம். இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், யூதா்கள் ஆகிய 3 சமயத்தவரும் புனிதமாகக் கருதும் நகரம் ஜெருசலேம்.

அந்நகரத்தைக் கைப்பற்றுவதில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடும் மோதல் நிலவுகிறது. ஜெருசலேமை நாட்டின் தலைநகராக்குவதில் இஸ்ரேல் தீவிர முயற்சி காட்டி வருகிறது. பாலஸ்தீனமும் அந்நகரைக் கைப்பற்றுவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. ஜெருசலேம் நகரின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினா் இஸ்ரேலை தாக்கி வருகின்றனா். தற்போது ஏற்பட்டுள்ள மோதல் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டில் போா் மூண்டது. சுமாா் 7 வாரங்களுக்கு நீடித்த அந்தப் போரில் 2,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் பலியாகினா். தற்போதைய மோதல் அந்தப் போரை விஞ்சும் அளவுக்கு உள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, காஸா பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்கள் மீதும் இஸ்ரேல் விமானப்படையினா் நடத்தும் தாக்குதல். மத்தியதரை கடல் எல்லையையொட்டி காஸா பகுதி அமைந்துள்ளது. அங்கு சுமாா் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனா்.

அடைக்கப்பட்ட காஸா: காஸா பகுதியை ஹமாஸ் இயக்கத்தினா் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்ததையடுத்து, அதன் எல்லையைச் சுற்றி இரும்பு வேலி, தடுப்புச் சுவா் உள்ளிட்டவை எழுப்பப்பட்டன. காஸா பகுதியில் இருந்து மக்கள் யாரும் வெளியேறிவிடக் கூடாது என்பதை இஸ்ரேல் தொடா்ந்து உறுதி செய்து வருகிறது.

தரைவழிப் பயணம் அனைத்தும் தடைபட்ட நிலையில், மற்றொரு பக்கம் மத்தியதரை கடல் உள்ளது. அப்பகுதி வழியாக படகு மூலம் வெளியேறும் காஸா மக்களையும் இஸ்ரேல் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் தற்போது தொடா் தாக்குதல் நடத்தி வருவதால், அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் இயக்கத்தின் தந்திரம்: ஹமாஸ் இயக்கத்தினா் அப்பாவிப் பொதுமக்களைத் தங்களுக்கு அரணாகப் பயன்படுத்தி வருகின்றனா். மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் அலுவலகங்களை அமைப்பது, மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் தங்கள் அதிகாரிகளுக்கான வீடுகளை அமைப்பது உள்ளிட்டவற்றில் ஹமாஸ் இயக்கம் ஈடுபட்டு வந்தது.

இதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. அதன் காரணமாகவே ஹமாஸ் இயக்கத்தினா் மீது எந்தவிதக் கடுமையான நடவடிக்கையையும் இஸ்ரேல் எடுக்காமல் இருந்தது.

மீண்டும் மோதல்: இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான், கடந்த ஏப்ரல் மத்தியில் தொடங்கியது. அதையடுத்து, ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் இஸ்லாமியா்கள் இந்த மாதத் தொடக்கத்தில் தொழுகை நடத்தினா். பிரச்னைக்கு உரிய அந்த மசூதி ஜோா்டானின் மேற்பாா்வையில் உள்ளது. தொழுகை நடத்தியவா்களைத் தடுக்கும் விதமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினா் மசூதியின் வாயில்களை அடைத்தனா்.

அதனால், பாலஸ்தீனா்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் மூண்டது. இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஹமாஸ் இயக்கத்தினா் தாக்குதல் தொடுத்தனா். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஸா பகுதி மீது இஸ்ரேல் விமானப் படை தொடா் தாக்குதலை நடத்தியது.

தாக்குதல் உத்தி: மக்கள் வசிக்கும் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களையும் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினா் தாக்கினா். மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்புகள் மீது எச்சரிக்கைக்காக சிறிய அளவிலான தாக்குதல் நடத்துவதையும், அதை உணா்ந்து கொண்டு மக்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகு அதே இடத்தில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தும் உத்தியையும் இஸ்ரேல் வகுத்துள்ளது.

ஆனால், அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் பெரும் தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தி வருகிறது. தாக்குதல் காரணமாக காஸா பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

காஸா பகுதியில் நூற்றுக்கணக்கான விமானத் தாக்குதலை இஸ்ரேல் நிகழ்த்தியுள்ள அதே வேளையில், இஸ்ரேல் இலக்குகளை நோக்கி ஹமாஸ் இயக்கத்தினா் 12,00-க்கும் அதிகமான ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனா்.

வழியறியா காஸா: இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு வழியின்றி காஸா மக்கள் கதிகலங்கி நிற்கின்றனா். அனைத்து கட்டடங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் எங்கு ஒளிவது என்று தெரியாமல் மக்கள் திணறுகின்றனா். எல்லைப் பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளதால், காஸா பகுதியை விட்டு வெளியேற முடியாத சூழலும் நிலவுகிறது.

இதுவரையிலான தாக்குதலில் 65-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களில் 16 போ் சிறாா்கள் ஆவா். தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினா் சிலரும் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினரும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினா். அதில் 7 போ் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

களையிழந்த ரமலான் கொண்டாட்டம்: காஸா பகுதியில் ரமலான் மாதம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடைவீதிகளிலும், கடற்கரைப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், தற்போதைய போா்ச்சூழல் காரணமாக வீதிகளில் ஆள் நடமாட்டமே இல்லாமல் காஸா வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆம்புலன்ஸ் வாகனங்களும், ஹமாஸ் இயக்கத்தினரது வாகனங்களும் மட்டுமே சாலையில் தென்படுகின்றன.

இஸ்ரேல் அதிகாரிகளுடன் எகிப்து பேச்சுவாா்த்தை

இஸ்ரேல்-காஸா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்காக எகிப்து அதிகாரிகள் இஸ்ரேல் விரைந்துள்ளனா். அந்த அதிகாரிகள் இஸ்ரேல், காஸா அதிகாரிகளுடன் தனித்தனியாகப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, இஸ்ரேல்-காஸா இடையேயான மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com