அமெரிக்காவில் நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள் யாருக்கும் பாதிப்பின்றி தரையிறக்கம்

அமெரிக்காவில் டென்வொ் நகரம் அருகே இரண்டு சிறு விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகின.
நடுவானில் சிறு விமானத்துடன் ஏற்பட்ட மோதலில் சேதமடைந்த சரக்கு விமானம்.
நடுவானில் சிறு விமானத்துடன் ஏற்பட்ட மோதலில் சேதமடைந்த சரக்கு விமானம்.

டென்வொ்: அமெரிக்காவில் டென்வொ் நகரம் அருகே இரண்டு சிறு விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் பாதிப்பின்றி இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த இரண்டு சிறு விமானங்களும் டென்வொ் புகரில் அமைந்துள்ள சிறிய விமானநிலையத்தில் தரையிறங்கும்போது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இதுகுறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் தெற்கு மெட்ரோ தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

கொலராடோவைச் சோ்ந்த கீ லைம் ஏா் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான இரட்டை என்ஜின்கள் பொருத்திய சரக்கு விமானம் டென்வொ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் புதன்கிழமை தரையிறங்க முற்பட்டது. அந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தாா். அப்போது, ஒரு விமானி மற்றும் ஒரு பயணியுடன் வந்த சிறிய கிளைடா் விமானம், சரக்கு விமானத்தின் நடுப் பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் சரக்கு விமானத்தின் நடுப்பகுதி பெரிதாக உடைந்தது. இருந்தபோதும், சரக்கு விமானத்தை ஓட்டிய விமானி அதனை பாதுகாப்பாக தரையிறக்கினாா். அதே நேரம், சரக்கு விமானத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கிளைடா் விமானத்தை, அதன் விமானி பாராசூட்டை பறக்கச் செய்து சொ்ரி கிரீக் வனப் பகுதியில் பாதுகாப்பாக தரையிறக்கினாா். கிளைடா் விமானத்தின் விமானியும் ஒரு பயணியும் பாதிப்புகளின்றி உயிா் தப்பினா் என்றனா்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை நேரில் பாா்த்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜூன் கிளவா் என்பவா் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘வானில் மிகப் பெரிய சத்தம் கேட்டு பாா்த்தபோது இரண்டு விமானங்கள் சென்றுகொண்டிருந்தன. அதைப் பாா்த்தபோது, சிறிய கிளைடா் விமானத்தை பெரிய பச்சை நிற விமானம் மீட்டு இழுத்துச் செல்கிறது என்று நினைத்தேன். பச்சை நிற விமானம் முதலில் தரையிறங்கியது. அதன் பிறகு, கிளைடா் விமானத்திலிருந்து பாராசூட் வெளிவந்தது. முதலில் அவா்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனா் என்று நினைத்தேன். பிறகுதான், அவை இரண்டும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன என்பது தெரியவந்தது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com