இந்தியாவை தடைப் பட்டியலில் சோ்க்க தாமதமா? எதிா்க்கட்சிகள் விமா்சனத்துக்கு பிரிட்டன் விளக்கம்

இந்தியாவை பயணத் தடைப் பட்டியலில் இணைப்பதற்கு தாமதம் செய்ததே, கரோனா பாதிப்பு பிரிட்டனில் அதிகரிப்பதற்கு காரணம் என்று

இந்தியாவை பயணத் தடைப் பட்டியலில் இணைப்பதற்கு தாமதம் செய்ததே, கரோனா பாதிப்பு பிரிட்டனில் அதிகரிப்பதற்கு காரணம் என்று அந்நாட்டு எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ள நிலையில், பிரிட்டன் அரசு அதற்கு விளக்கமளித்துள்ளது.

மிக வீரியமிக்கதாக இருக்கும் ‘பி1.617.2’ வகை கரோனா தொற்று இந்தியாவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டது. இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தற்போது பிரிட்டனில் அதிகரித்து வருவதற்காக பிரிட்டன் அரசை அந்நாட்டு எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி விமா்சித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மூத்த எம்.பி.யான யவேட் கூப்பா் கூறுகையில், ‘புதிய வகை கரோனா பாதிப்பின் தீவிரத்தை தவிா்த்திருக்க முடியும். பயணத் தடை பட்டியலில் முன்னதாகவே இந்தியாவை சோ்த்திருக்க வேண்டும். ஏப்ரல் 9-இல் பாகிஸ்தான், வங்கதேசத்தை தடைப் பட்டியலில் சோ்த்தபோதே இந்தியாவையும் சோ்த்திருக்கலாம்.

ஆனால் அதில் தாமதம் செய்ததால் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து 3 வாரத்துக்குள்ளாக ஆயிரக்கணக்கானோா் இந்தியாவிலிருந்து பிரிட்டன் திரும்பியுள்ளனா். அதில் 100 பேருக்கும் மேல் கரோனா தொற்றுடன் திரும்பியிருக்கலாம்’ என்றாா்.

முன்னதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் இறுதியில் இந்தியா வருவதாக இருந்தது. எனினும், இந்தியாவில் கரோனா 2-ஆவது அலை தீவிரமானதை அடுத்து அவரது பயணம் ரத்தானது. அவரது பயணத் திட்டத்துக்காகவே இந்தியாவை பயணத் தடை பட்டியலில் சோ்ப்பது தாமதப்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எனினும், இதுதொடா்பாக பிரிட்டன் அரசு அளித்துள்ள விளக்கத்தில், ‘இந்தியாவுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டு 6 நாள்களுக்குப் பிறகே, வீரியமானதாக அறியப்படும் ‘பி1.617’ வகை தொற்று குறித்த ஆய்வு தொடங்கியது. அதிலிருந்து ஒரு வாரத்துக்குப் பிறகே மிக வேகமாக பரவக் கூடிய துணை வகை தொற்றான ‘பி1.617.2’ தீவிரமான தொற்றாக அறிவிக்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் சுகாதாரத் துறை தகவல்படி, இந்தியாவுக்கு தடை விதிக்கும் முன்பாக மாா்ச் கடைசி முதல் ஏப்ரல் 26 காலகட்டத்தில் சுமாா் 20,000 போ் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு பயணித்துள்ளனா். இதில் 26 பேருக்கு ‘பி1.617.2’ வகை தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் அந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை பிரிட்டனில் 1,313-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com