காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி;  அரசியல் தலைவர்களை குறிவைப்பதால் சண்டைநிறுத்தத்தில் சிக்கல்

காஸா நகரம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து காஸô நகரில் தகர்ந்த கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணி.
இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து காஸô நகரில் தகர்ந்த கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணி.

காஸா நகரம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே நடந்துவரும் மோதலில் அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பு இதுவாகும். இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 10 பெண்கள், 8 குழந்தைகளும் அடங்குவர்; 50 பேர் காயமடைந்துள்ளனர் என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதால் சண்டை நிறுத்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
 முன்னதாக, காஸாவின் கான் யூனிஸ் என்ற தெற்கு நகரத்தில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவரான யாகியே சின்வார் என்பவர் தங்கியிருந்த வீட்டை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
 கடந்த இருநாள்களில் மூத்த ஹமாஸ் தலைவர்களின் வீடுகள் மீது நடத்தப்படும் 3-ஆவது தாக்குதலாகும் இது. சர்வதேச மத்தியஸ்தர்கள் சண்டைநிறுத்தத்தை ஏற்படுத்த முயன்றுவரும் வேளையில், அதற்குள் ஹமாஸ் இயக்கத்துக்கு முடிந்தவரை சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இஸ்ரேல் தனது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் இயக்கத்தினர் இடையிலான மோதல் இந்த மாத ஆரம்பத்தில் தொடங்கியது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் காவல் படையினர் நுழைந்ததையடுத்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அவர்களை இஸ்ரேல் காவல் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
 இதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து காஸா பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர், ஜெருசலேம் நகரை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் காஸா மீது வான்வழி தாக்குதலைத் தொடங்கியது. இதுவரையிலான தாக்குதலில் 52 குழந்தைகள், 31 பெண்கள் உள்பட 181 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 1,225 பேர் காயமடைந்ததாகவும், இஸ்ரேல் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 தலைவர்களுக்கு குறி: காஸாவில் மக்களுடன் மக்களாக குடியிருந்து வரும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவரான சின்வார், அவரது சகோதரர் முகமது ஆகியோரின் வீடுகளை குண்டுவீசி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. சனிக்கிழமை, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு மூத்த தலைவரான கலீல் அல்-ஹயே என்பவரின் வீடு தாக்குதலில் தரைமட்டமானது. இந்தத் தாக்குதலின்போது இருவரும் வீட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஹமாஸின் மூத்த தலைவரான இஸ்மாயில் கனி துருக்கி மற்றும் கத்தாரில் மாறிமாறி இருந்து வருகிறார்.
 ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் இயக்கம் ஆகியவை கடந்த ஒரு வார தாக்குதலில் தங்களது 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல், 20-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள், புகைப்படங்களை வெளியிட்டு, அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
 சண்டை நிறுத்தத்தில் சிக்கல்: ஹமாஸின் அரசியல் தலைவர்களை இஸ்ரேல் குறிவைப்பதன் மூலம் சண்டைநிறுத்த முயற்சிகள் சிக்கலாகியுள்ளதாக எகிப்து தூதரகப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
 சண்டையை முடிவுக்கு கொண்டுவர எகிப்து மத்தியஸ்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸின் ஏவுகணை திறன்களை அழிக்க வேண்டுமானால் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்த வேண்டியிருக்கும். அது ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் அழிவை ஏற்படுத்திவிடும் என்றார்.
 ஹமாஸ் மற்றும் பிற போராளிக் குழுவினர் இஸ்ரேலை நோக்கி இதுவரை 2.900 ஏவுகணைகளை செலுத்தியுள்ளனர். அதில் 450 ஏவுகணைகள் குறைந்த தொலைவிலேயே விழுந்துவிட்டதாகவும், 1,150 ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு தொழில்நுட்பம் மூலம் இடைமறித்து அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
 ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக 20 லட்சம் பேர் வசிக்கும் காஸா நகரை குறிவைத்து நூற்றுக்கணக்கான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
 காஸாவில் உள்ள 12 மாடி கட்டடத்தை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்தது. அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் அந்தக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
 ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன. ஒரு மணி நேரத்தில் அங்கு குண்டு வீசப் போவதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து அந்தக் கட்டடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்.
 முழு வீச்சில் ராணுவ நடவடிக்கை: இஸ்ரேல் பிரதமர்
 காஸா பகுதி தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தினர் முழு வீச்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்தார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அவர், "தங்களின் செயலுக்கு ஹமாஸ் படையினர் மிகப் பெரிய இழப்பை சந்தித்தாக வேண்டும். அமைதி, பாதுகாப்பு திரும்புவதற்கு சில காலமாகும்' என்றார்.
 
 இஸ்லாமிய நாடுகள்அவசர ஆலோசனை
 பெய்ரூட், மே 16: காஸாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை காணொலி முறையில் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சவூதி வெளியுறவு அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்கான், காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்; உதவி மற்றும் நிவாரண பொருள்கள் காஸாவை சென்றடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 மேற்கு கரையில் உள்ள ரமல்லாவில் இருந்து பேசிய பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் மால்கி, "நிறவெறி அரசான இஸ்ரேல், எங்கள் மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த திங்கள்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 10 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இஸ்ரேலின் கொலை இயந்திரத்தால் எங்கள் மக்கள் சோர்வடைந்துவிட மாட்டார்கள்' என்றார்.
 அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
 லாஸ் ஏஞ்சலீஸ், மே 16: காஸா முனை மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாஸ் ஏஞ்சலீஸ், போஸ்டன், பிலடெல்பியா மற்றும் பல நகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
 மேற்கு லாஸ் ஏஞ்சலீஸில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி சுமார் 3 கி.மீ. நடைப்பயணமாகச் சென்றனர். "சுதந்திரமான பாலஸ்தீனம்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். சான் ஃபிரான்சிஸ்கோவில் ஏராளமானோர் திரண்டு, "பாலஸ்தீனம் விடுவிக்கப்பட வேண்டும்' என கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர். வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் நினைவிடத்தில் இருந்து தேசிய அருங்காட்சியகம் வரை ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவா ளர்கள் பேரணியாகச் சென்றனர்.
 ஐ.நா. கவலை
 நியூயார்க், மே 16: காஸாவில் சர்வதேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் இருந்த அடுக்குமாடி கட்டடத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதால் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளார் என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பொதுமக்கள் மற்றும் ஊடக கட்டமைப்புகளைக் கண்மூடித்தனமாகக் குறிவைப்பது எல்லா வகையிலும் தவிர்க்கப்பட வேண்டும்' என ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்' என்றார்.
 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிட சீனா வலியுறுத்தல்
 பெய்ஜிங், மே 16: இஸ்ரேல், ஹமாஸ் இயகத்தினர் இடையே நடைபெற்று வரும் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
 "சர்வதேச நீதிக்கு எதிரான பக்கத்தில் அமெரிக்கா நிற்பதால், இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது' என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியிடம் தொலைபேசி மூலம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
 "இந்த பிரச்னையில் இருதரப்பு தீர்வுக்கு சீனா ஆதரவளிப்பதாகவும், இதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்த வேண்டும் எனவும்' சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com