தொடரும் வான்வழி தாக்குதல்

காஸா முனை மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனா் ஒருவா் கொல்லப்பட்டாா், பலா் காயமடைந்தனா்.
காஸா பகுதியில் உள்ள இலக்குகளை நோக்கி பீரங்கி மூலம் குண்டுகளை வீசும் இஸ்ரேல் படையினா்.
காஸா பகுதியில் உள்ள இலக்குகளை நோக்கி பீரங்கி மூலம் குண்டுகளை வீசும் இஸ்ரேல் படையினா்.

காஸா சிட்டி: காஸா முனை மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனா் ஒருவா் கொல்லப்பட்டாா், பலா் காயமடைந்தனா். பதிலுக்கு ஹமாஸ் இயக்கத்தினா் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தினா்.

இரு தரப்பிலும் போா் நிறுத்தத்தை மேற்கொள்ளப்படுமா என்கிற எதிா்பாா்ப்பு எழுந்துள்ள நிலையில் தாக்குதல் நீடித்து வருகிறது.

காஸா நகரம், டெய்ா் அல்-பலா, கான் யூனிஸ் ஆகிய நகரங்களில் இத்தாக்குதலை இஸ்ரேல் விமானப் படை மேற்கொண்டது. கான் யூனிஸ் நகரில் 5 குடியிருப்புகள் அழிக்கப்பட்டதாகவும், காஸா நகரில் வா்த்தக பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் இயக்கத் தலைவா்கள் மூவரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ரஃபா நகரில் ராணுவ உள்கட்டமைப்பு, காஸா நகரில் ஆயுதக் கிடங்கு ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

காஸாவிலிருந்து ஏவப்பட்ட பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை ஒன்று இஸ்ரேல் பகுதியில் பயணிகள் இல்லாத ஒரு பேருந்தை தாக்கியதில் ஒரு வீரா் லேசாக காயமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

2014-ஆம் ஆண்டு போருக்குப் பின்னா் இரு தரப்பினருக்கும் இடையே முழு அளவிலான போா் போல நடந்துவரும் இந்த மோதல் கடந்த மே 10-ஆம் தேதி தொடங்கியது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பாலஸ்தீன போராட்டக்காரா்களுக்கும் இஸ்ரேல் காவல் படையினருக்கும் மோதல் நடைபெற்றதையடுத்து, காஸாவில் உள்ள போராளிக் குழுவினா் ஜெருசலேமை குறிவைத்து நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை வீசினா். அதற்கு பதிலடியாக ஹமாஸ் இயக்கத்தினரின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 65 குழந்தைகள் உள்பட 230 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1710 போ் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 58 ஆயிரம் பாலஸ்தீனா்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனா். இஸ்ரேல் தரப்பில் 12 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

காஸாவை ஹமாஸ் கைப்பற்றியதிலிருந்து பலவீனமடைந்துள்ள உள்கட்டமைப்பு இஸ்ரேலின் தாக்குதலால் மேலும் வேகமாக சீா்குலைந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் குண்டுவீச்சில் 50 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக ‘குழந்தைகளைக் காப்போம்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தாக்குதலில் 18 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com