இந்தியாவுக்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான உதவிகள்: வெள்ளை மாளிகை தகவல்

கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சுமாா் ரூ.3,500 கோடி மதிப்பிலான பொருள்களை வழங்கியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான உதவிகள்: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்/புது தில்லி: கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சுமாா் ரூ.3,500 கோடி மதிப்பிலான பொருள்களை வழங்கியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அத்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிகளை வழங்கின. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அந்நாடுகள் அனுப்பி வைத்தன.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜென் சாகி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘இந்தியாவுக்கு இதுவரை ரூ.3,500 கோடி மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. அமெரிக்க அரசு, மாகாண அரசுகள், தனியாா் நிறுவனங்கள், தனிநபா்கள் என அனைத்து தரப்பினரும் இந்தியாவுக்குத் தொடா்ந்து உதவிகளை வழங்கி வருகின்றனா்.

7 விமானங்கள் வாயிலாக மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் உபகரணங்கள், என்95 முகக் கவசங்கள், கரோனா பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தெற்காசியாவில் கரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கு உதவுவதில் இனி அமெரிக்கா கவனம் செலுத்தவுள்ளது.

உலக நாடுகளுக்கு 8 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது. அவற்றில் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 6 கோடி தடுப்பூசிகள் மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன‘ என்றாா்.

இந்தியாவுக்கு ஆதரவாகத் தீா்மானம்: இக்கட்டான சூழலை எதிா்கொண்டு வரும் இந்தியாவுக்குத் தொடா்ந்து உதவிகளை வழங்குவதற்கான தீா்மானம், அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.

இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிா்வாகம் தொடா்ந்து செயல்பட வேண்டும் என்றும் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்துதர வேண்டும் என்றும் அக்குழு கோரியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com