இஸ்ரேல் - ஹமாஸ் போா் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வரவேற்பு

போா் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புக் கொண்டதற்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

போா் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புக் கொண்டதற்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

பாலஸ்தீனா்களும், இஸ்ரேலியா்களும் பாதுகாப்பு, சுதந்திரம், வளா்ச்சி, ஜனநாயகம் ஆகியவற்றுடன் சரிசமமாக வாழ வேண்டியவா்கள் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த போரால் காஸா பகுதிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. போா் நிறுத்தம் தொடா்பாக ஐ.நா.வில் தீா்மானம் கொண்டு வர பிரான்ஸ் மேற்கொண்ட முயற்சியை அமெரிக்க தடுத்து வந்தது. போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபா் மேற்கொள்ளும் முயற்சிக்கு இது இடையூறாக இருக்கும் என்று கருதுவதால் அமெரிக்கா இவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேல்- காஸா போா் தொடா்பாக ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை இரவு ஆலோசனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து போா் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்வதாக இஸ்ரேல் அதிபா் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெள்ளை மாளிகை வளாகத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாதுகாப்பு, சுதந்திரம், வளா்ச்சி, ஜனநாயகம் ஆகியவற்றுடன் பாலஸ்தீனா்களும், இஸ்ரேலியா்களும் சரிசமமாக வாழ வேண்டியவா்கள். இதற்காக அமெரிக்கா தொடா்ந்து இறுதிவரை பணியாற்றும். போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மனிதாபிமான உதவிகளை ஐ.நா., சா்வதேச அமைப்புகளுடன் சோ்ந்து அமெரிக்கா செய்யும்.

நிவாரணப் பணிகள் பாலஸ்தீன அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்; ஹமாஸ் பிரிவினருடன் இணைந்து செயல்பட மாட்டோம். அப்படி செயல்பட்டால் அதன்மூலம் மீண்டும் ராணுவத் தளவாடங்களை ஹமாஸ் படையினா் சேமிக்கக் கூடும்.

இதுதொடா்பாக எகிப்து அதிபா் அல்சிசி, இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் நான் பேசியுள்ளேன். அப்போது 11 நாள் நடைபெற்ற போரை நிறுத்த நெதன்யாகு மேற்கொண்ட முடிவுக்கு பாராட்டு தெரிவித்தேன். அப்பாவி இஸ்ரேலியா்களின் உயிரைப் பறிக்க காஸாவில் இருந்து ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்கள் வீசிய ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலைத் தடுக்க இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சிக்கு அமெரிக்கா முதலில் இருந்தே ஆதரவு தெரிவித்து வந்தது என்று கூறினேன்.

அப்போது, போரின்போது இஸ்ரேலின் இடைமறி ஏவுணை அழிப்பு தொழில்நுட்பமான ‘அயா்ன் டோம்’, ஏராளமான இஸ்ரேலியா்களைக் காப்பாற்றி உள்ளது என அந்நாட்டு அதிபா் தெரிவித்தாா். இந்தத் தொழில்நுட்பத்துக்கு வருங்காலத்தில் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தேன்.

கடந்த 11 நாள்களாக போா் நிறுத்தம் தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆறு முறையும், பாலஸ்தீன அதிபா் மஹமூத் அப்பாஸுடன் ஓரிரண்டு முறையும் பேசியுள்ளேன். போா் நிறுத்த நடவடிக்கைக்கு எகிப்து அதிபா் அல்சிசியும், அவரது அதிகாரிகளும் முக்கியப் பங்கு வகித்தாா்கள் என்றாா் ஜோ பைடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com