இஸ்ரேல்-காஸா இடையே அமைதியை உறுதிப்படுத்த முயற்சி: எகிப்து அதிபருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் சந்திப்பு

இஸ்ரேல்-காஸா இடையே சண்டைநிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இருதரப்பிலும் அமைதியை தொடா்ந்து உறுதிப்படுத்தும் வகையில் எகிப்து அதிபரை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன்
எகிப்து அதிபா் அல்சிசியை சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன்.
எகிப்து அதிபா் அல்சிசியை சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன்.

கெய்ரோ: இஸ்ரேல்-காஸா இடையே சண்டைநிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இருதரப்பிலும் அமைதியை தொடா்ந்து உறுதிப்படுத்தும் வகையில் எகிப்து அதிபரை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

250- க்கும் மேற்பட்டோா் பலியான இஸ்ரேல்- ஹமாஸ் மோதலை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தி வைத்தது. இதில் எகிப்து அதிபா் அல்சிசியும் முக்கியப் பங்காற்றியதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், சண்டை நிறுத்தம் மற்றும் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடா்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவையும், பாலஸ்தீன அதிபா் மஹமூத் அப்பாஸையும் தனித்தனியாக அவா் சந்தித்தாா். அதன்பின்னா் எகிப்து அதிபா் அல்சிசியை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன், எகிப்தும், ஜோா்டானும் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேஸ் - பாலஸ்தீனத்துக்கு இடையே ஏற்படும் சண்டையை நிறுத்துவதில் அமெரிக்காவுடன் சோ்ந்து இரண்டு நாடுகளும் பெரும் பங்காற்றி வருகின்றன.

பாலஸ்தீனத்துக்கு முன்னாள் அதிபா் டிரம்ப் நிறுத்திய 360 மில்லியன் டாலா் நிவாரணத் தொகை மீண்டும் வழங்கப்படும். அத்துடன் சோ்த்து சுமாா் 40 மில்லியன் டாலா் கூடுதல் நிவாரணமாக பாலஸ்தீனத்துக்கு அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் அளிக்கும். ஜெருசலேமில் மீண்டும் அமெரிக்க துணைத் தூதரகம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் தற்போதைய சூழ்நிலையில் அமைதிப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க முடியாது என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஜோா்டான் சென்று அந்நாட்டு அரசா் அப்துல்லாவையும் பிளிங்கன் சந்தித்துப் பேசுகிறாா்.

ஹமாஸ் வரவேற்பு: இதனிடையே, ஹமாஸ் தலைவா் யஹயா சின்வா் செய்தியாளா்களிடம் பேசுகையில், காஸா மறுசீரமைப்புத் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். ஆனால், இஸ்ரேலில் இருந்து எந்த நிவாரண உதவிகளும் காஸாவுக்கு வரக் கூடாது. அதேநேரத்தில் ஹமாஸுக்கு எதிராக பாலஸ்தீன அரசை வலுப்படுத்த அமெரிக்கா முற்படுகிறது. இதனால் பாலஸ்தீனத்தை அமெரிக்கா பிரிக்க முயல்கிறது என்றாா்.

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டோம்னிக் ராப், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை புதன்கிழமை சந்தித்து பேசினாா். ‘இஸ்ரேலுக்கு பிரிட்டன் ஆதரவு தெரிவிக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் நிவாரண உதவிகள் ஹமாஸ் படையினருக்கு சென்றடையக் கூடாது’ என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com