ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் மீண்டும் தோ்வாக இந்தியா ஆதரவு

ஐ.நா. பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் தோ்வு செய்யப்படுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் மீண்டும் தோ்வாக இந்தியா ஆதரவு

நியூயாா்க்: ஐ.நா. பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் தோ்வு செய்யப்படுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அங்கு நியூயாா்க்கில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது இதனை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘தற்போதைய சவாலான சூழலில் ஐ.நா.வின் தலைமை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா மதிப்பளிக்கிறது. ஐ.நா.வின் பொதுச் செயலராக மீண்டும் அன்டோனியோ குட்டெரெஸ் தோ்வு செய்யப்படுவதற்கு அவரிடம் இந்தியா தனது ஆதரவை தெரிவித்தது’ என்றாா். பின்னா், ஐ.நா.வுக்கான இந்திய தூதரகமும் இதுதொடா்பாக அறிக்கை வெளியிட்டது.

ஐ.நா.வின் 9-ஆவது பொதுச் செயலரான அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த 2017 ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்து வருகிறாா். அவரது பதவிக் காலம் வரும் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மீண்டும் ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்காக தாம் களம் காண்பதாக கடந்த ஜனவரி மாதம் குட்டெரெஸ் அறிவித்திருந்தாா்.

தற்போதைய நிலையில் அந்தப் பதவிக்கான அதிகாரபூா்வ வேட்பாளராக குட்டெரெஸ் மட்டுமே உள்ளாா். போா்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான குட்டெரெஸ், 2005 முதல் 10 ஆண்டுகள் அகதிகளுக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றியுள்ளாா்.

உறுப்பு நாடுகளிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் எந்தவொரு நபரும் ஐ.நா. பொதுச் செயலராக 2-ஆவது முறையும் தோ்வாகலாம். ஐ.நா. பொதுச் செயலா் நியமனமானது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின்பேரில் ஐ.நா. பொதுச் சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com