இந்தியாவின் கிரேட்டா தன்பெர்க்; உலக தலைவர்களுக்கு பாடம் எடுத்த தமிழ்நாட்டு சிறுமி

பருவநிலை மாற்ற மாநாட்டில் தூய்மை தொழில்நுட்பம் குறித்து உரையாற்ற வினிஷா உமாசங்கருக்கு இளவரசர் வில்லியம் அழைப்பு விடுத்திருந்தார்.
வினிஷா உமாசங்கர்
வினிஷா உமாசங்கர்

கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசிய இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுமி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் உலக தலைவர்கள் மீது தங்கள் தலைமுறை கோபமாகவும் எரிச்சலாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார். உலகை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார். 

பருவநிலை மாற்றத்தில் சுற்றுச்சூழலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் முன்னெடுப்பு எடுப்பவர்களுக்கு பிரிட்டன் இளவரசர் வில்லியமின் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், அறக்கட்டளை வழங்கும் எகோ ஆஸ்கர் விருதின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற வினிஷா உமாசங்கரை, பருவநிலை மாற்ற மாநாட்டில் தூய்மை தொழில்நுட்பம் குறித்து பேச வில்லியம் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில், மாநாட்டில் உரையாற்றிய வினிஷா, "இன்று நான் மிகுந்த மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செய்யத் தொடங்குங்கள். எகோ ஆஸ்கர் விருதை வென்றவர்கள், இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்கள் ஆகியோரின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

புதைபடிவ எரிபொருள்கள், புகை, மாசுபாடு சார்ந்த பொருளாதாரத்தை ஆதாரிக்க கூடாது. பழைய விவாதங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை. எனவே எங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.

எகோ ஆஸகர் பரிசு வென்றவர்கள், இறுதிப் போட்டியாளர்கள் சார்பாக, எங்களுடன் இணைய உங்களை அழைக்கிறேன். எங்களுக்கு ஆதரவாக நிற்க உங்களை அழைக்கிறேன். பழைய சிந்தனைகளையும், பழைய பழக்க வழக்கங்களையும் கைவிடுவீர்கள் என்று நம்புகிறோம். 

ஆனால் நான் தெளிவாக சொல்கிறேன். எங்களுடன் சேர உங்களை அழைக்கும்போது, ​​நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். 

ஆனால் தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். 

மேலும் நாம் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. எனக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. நான் பூமியைச் சேர்ந்த ஒரு பெண். நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன். நான் ஒரு மாணவர், கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், தொழில்முனைவோர். ஆனால் மிக முக்கியமாக, நான் ஒரு நம்பிக்கையாளர்" என்றார்.

சூரிய சக்தியில் இயங்கும் தெரு இஸ்திரி வண்டிக்காக, எகோ ஆஸ்கர் விருதின் இறுதிச்சுற்றுக்கு வினிஷா உமாசங்கர் தகுதிபெற்றார். அழுக்கு கரிக்கு பதில் தூய்மையான சூரிய ஒலியை பயன்படுத்துவதை அவர் இலக்காக கொண்டுள்ளார். 

முன்னதாக, ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்றம் குறித்து விவகாரத்தில் உலக தலைவர்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com