கரோனாவுக்கு எதிரான போரில் திருப்புமுனை; மாத்திரைகளுக்கு அனுமதி வழங்கிய பிரிட்டன்

மோல்னுபிரவீர் என்ற மாத்திரையை மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை நிறுவனம் பரிந்துரை செய்துள்ள நிலையில், இது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவுக்கு எதிரான் போரில் ஊக்கம் தரும் வகையில், அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் மெர்க் நிறுவனம், ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கரோனா மாத்திரைகளுக்கு முதல் நாடாக பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. 

மோல்னுபிரவீர் என்ற மாத்திரையை மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை நிறுவனம் பரிந்துரை செய்துள்ள நிலையில், இது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறிகள் தென்படும் ஐந்து நாள்களுக்குள் இந்த மருந்தை பயன்படுத்தலாம். கரோனாவுக்கு எதிராக வாய் வழியாக அளிக்கப்படும் முதல் மாத்திரை இதுவாகும். இதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. மோல்னுபிரவீர் மாத்திரைக்கு அனுமதி வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளனர்.

உலகம் முழுவதும் 52 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு காரணமான கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தற்போது தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுவருகிறது. கிலியட் நிறுவனத்தின் ஆன்டிவைரல் ரெம்டெசிவிர் மற்றும் ஜெனரிக் ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் ஆகிய மாத்திரைகள் மருத்துவமனை சிகிச்சை பிறகே அளிக்கப்படுகிறது.

மோல்னுபிரவீர் மாத்திரைகள் குறித்த ஆய்வுகள் கடந்த மாதம் வெளியானது. அதில், கரோனா உயிரிழப்புகளை இந்த மாத்திரை 50 சதவிகிதம் குறைப்பதாகவும் தீவிர கரோனா ஏற்படுவதற்கு முன்பு இது அளிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்வதற்கான தேவையை 50 சதவிகிதம் குறைப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாத்திரைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

பிரிட்டனில், லாகேவ்ரியோ என்ற பெயரில் இந்த மாத்திரைகள் விற்கப்படவுள்ளது. கரோனாவை ஏற்படுத்தும் வைரஸின் மரபணு குறியீட்டில் பிழைகளை ஏற்படுத்தும் வகையில் இந்த மாத்திரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஐந்து நாள்களுக்கு இந்த மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com