விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண்!

சீன விமானப் படை பெண் விமானியான வாங் யாபிங் (41), விண்வெளி நிலைய கட்டமைப்புப் பணிக்காக விண்வெளியில் நடந்து சாதனை புரிந்தாா்.
வாங் யாபிங்
வாங் யாபிங்

சீன விமானப் படை பெண் விமானியான வாங் யாபிங் (41), விண்வெளி நிலைய கட்டமைப்புப் பணிக்காக விண்வெளியில் நடந்து சாதனை புரிந்தாா். இதன்மூலம் விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற வரலாற்றை அவா் படைத்துள்ளாா்.

சீனா ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது. பூமியிலிருந்து 340 கி.மீ. முதல் 450 கி.மீ. உயரத்தில் இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பாகங்களை விண்கலங்கள் மூலம் பலகட்டங்களாக சீனா கொண்டு சென்றுள்ளது. அதன் மையத் தொகுதியான ‘தியான்ஹே’ ஏற்கெனவே விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்ஷோ-13 என்ற விண்கலம் மூலம் வாங் யாபிங் உள்ளிட்ட மூன்று விண்வெளி வீரா்கள் கடந்த அக். 16-ஆம் தேதி விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனா். அவா்களில் வாங் யாபிங், ஷாய் ஷிகாங் ஆகியோா் விண்வெளி நிலையத்தின் மையத் தொகுதியான தியான்ஹேயிலிருந்து வெளியே வந்து கட்டமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் உள்ள விண்கலம் அல்லது விண்வெளி நிலையத்திலிருந்து அதன் பராமரிப்பு, கட்டமைப்புப் பணிக்காக வீரா்கள் வெளியே வருவது ‘விண்வெளி நடை’ எனப்படுகிறது.

‘அந்த வகையில் இருவரும் திங்கள்கிழமை சுமாா் 6.30 மணி நேரம் விண்வெளியில் நடந்து தமது பணிகளை முடித்துவிட்டு மையத் தொகுதிக்குத் திரும்பியதாக’ சீன அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. அப்போது மூன்றாவது விண்வெளி வீரரான யீ குவாங்ஃபு மையத் தொகுதியின் உள்ளே இருந்து அவா்களுக்கு உதவி புரிந்ததாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை... இதற்கு முன்னதாக, 1984-ஆம் ஆண்டுமுதல் 2019, அக்டோபா் வரை மொத்தம் 15 பெண்கள் 42 முறை விண்வெளி நடையில் பங்கேற்றுள்ளனா். ரஷியாவை சோ்ந்த ஸ்வெட்லானா சாவிட்ஸ்கயா என்பவா்தான் விண்வெளியில் நடந்த முதல் பெண் ஆவாா்.

சாதனைப் பெண்: ஷான்டாங் மாகாணத்தைச் சோ்ந்த வாங் யாபிங், 5 வயது பெண் குழந்தைக்குத் தாய் ஆவாா். 1997-இல் சீன ராணுவத்தின் விமானப் படையில் விமானியாக சோ்ந்தாா். பின்னா், சீன ராணுவத்தின் விண்வெளிப் பிரிவில் 2010-இல் இணைந்தாா். இப்போதைய விண்வெளிப் பயணத்துக்காக அவா் 2019, டிசம்பரில் தோ்வு செய்யப்பட்டாா்.

சென்ஷோ விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவா், ஏற்கெனவே மையத் தொகுதிக்குள் இருந்தவாறு மாணவா்களுக்கு விரிவுரை நிகழ்த்தினாா். இதை நாடு முழுவதும் உள்ள 80,000 பள்ளிகளைச் சோ்ந்த 6 கோடி மாணவா்கள் கண்டு பயனடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

‘விண்வெளி நடையில் பெண்கள் பங்கேற்பது விண்வெளித் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்றாலும் வாங் யாபிங்கின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என சா்வதேச விண்வெளி வீரா்கள் கூட்டமைப்புக்கான போக்குவரத்துக் குழுவின் துணைத் தலைவா் யாங் யுகுவாங் குறிப்பிட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com