
கோப்புப்படம்
கரோனா காலத்திற்கு பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அதிகரித்துள்ளது. வேலை நேரம் தாண்டி பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஊழியர்கள் பல்வேறு விதமான உளவியல் பிரச்னைகளை எதிர்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், பணி நேரம் முடிந்து ஊழியர்களை தொடர்புகொள்வது சட்டவிரோதம் என போர்ச்சுகல் அரசு அறிவித்துள்ளது. 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது.
வேலை நேரம் முடிந்த பின்னரும் அலுவலங்களிலிருந்து கால் வருவது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
அதிலும் கரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்து பணிபுரியும் முறையால் தனிப்பட்ட காரணங்களுக்காக செலவிடுவது வெகுவாக குறைந்துள்ளது.
இதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், போர்ச்சுகலில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊழியர்களின் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலையைக் கொண்டிருக்க வழிவகை செய்ய இந்தப் புதிய சட்டம் போர்ச்சுகல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அலுவலகம் சார்ந்த பணிகள் அதிகரிப்பதால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த சட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இச்சட்டத்தின்படி, பணி நேரம் முடிந்த பிறகு தொடர்பு கொள்ளும் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. மேலும், வீடுகளில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு எரிபொருள், இணையம், மின்சாரம் எனக் கூடுதலாக ஆகும் செலவுகளை சம்பந்தப்பட்ட அலுவலகங்களே செலுத்த வேண்டும் என அந்த புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அகதிகள் பிரச்னைக்கு புதின்தான் மூலகாரணம்
போர்ச்சுகலில் ஆட்சியில் உள்ள சோசலிஸ்ட் கட்சி வீட்டில் இருந்தபடியே பணி செய்யும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு புதிய சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இருப்பினும், அவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதில்லை.
முன்னதாக போர்ச்சுகல் அரசு இதேபோல ஒரு சட்டத்தை முன்மொழிந்திருந்தது. அதன்படி, வீடுகளில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் சாதனங்களை ஆப் செய்து கொள்ளலாம். இருப்பினும், இந்த சட்ட வரைவுக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.