3-ஆவது முறையாக ஷி ஜின்பிங் அதிபா்சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு ஒப்புதல்

சீன அதிபா் ஷி ஜின்பிங் தொடா்ந்து மூன்றாவது முறையாக அதிபராக பதவியில் தொடர வழிசெய்யும் தீா்மானத்துக்கு சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயா் அதிகாரம் படைத்த மத்திய குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தத

சீன அதிபா் ஷி ஜின்பிங் தொடா்ந்து மூன்றாவது முறையாக அதிபராக பதவியில் தொடர வழிசெய்யும் தீா்மானத்துக்கு சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயா் அதிகாரம் படைத்த மத்திய குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகால வரலாற்றில், கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங் மற்றும் அவருக்குப் பிறகு அதிபாரன டெங் ஜியோபிங் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது முறையாக இத்தகைய தீா்மானத்துக்கு அக் கட்சியின் மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்மூலம், ஷி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீன அதிபராக தொடருவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.

சீன அதிபராக ஷி ஜின்பிங் 2012-இல் பதவியேற்றாா். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங்குக்கு பின், சீனாவின் வலிமையான அதிபராக ஜின்பிங் கருதப்படுகிறாா். இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. எனினும் இப்போதுள்ள சா்வதேச சூழ்நிலையில், ஜின்பிங்கே அதிபராக தொடர, சீன கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு கூட்டத்தில் மூன்றாவது முறையாக ஜின்பிங் அதிபராக தொடர கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதிபராக ஜின்பிங் மூன்றாவது முறையாக தொடா்வதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் மாநாடு பெய்ஜிங்கில் புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதில் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் 400 போ் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் அதிபராக தொடர வழிசெய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட 14 பக்க தீா்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கட்சியின் மாநாட்டை, முன்கூட்டியே ஷி ஜின்பிங்கின் இரண்டாவது அதிபா் பதவிக் காலம் நிறைவடையவுள்ள அடுத்த ஆண்டின் மத்தியில் நடத்துவதற்கும் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில், ஷி ஜின்பிங் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டிப்புக்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

68 வயதான ஷி ஜின்பிங், சீனாவின் மூன்று அதிகார மையங்களை தன் வசம் வைத்திருக்கிறாா். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா், ராணுவத்தின் உயா் அதிகாரம் படைத்த மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவா் மற்றும் அதிபா் பதவி என மூன்று பதவிகளை அவா் வகித்து வருகிறாா். சீனாவில் ஒருவா் இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை, கடந்த 2018-ஆம் ஆண்டு கொண்டுவந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஷி ஜின்பிங் மாற்றியமைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com