பயங்கரவாதிகள் அங்கு சுதந்திரமாக சுற்றிதிரிகின்றனர்: ஐநாவில் பாகிஸ்தானை கிழித்து தொடங்க விட்ட இந்தியா

அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த பயங்கரவாதம், பகைமை உணர்வு, வன்முறை இல்லாத சுழலை உருவாக்குவது அவசியம் என இந்தியா தெரிவித்துள்ளது. 
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் காஜல் பட்
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் காஜல் பட்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் காஜல் பட் இதுகுறித்து செவ்வாய்கிழமை பேசுகையில், "இன்று பாகிஸ்தானின் பிரதிநிதி கூறிய சில அற்பமான கருத்துக்களுக்கு பதிலளிக்க நான் மீண்டும் ஒருமுறை களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

எனது நாட்டிற்கு எதிராக தவறான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை பரப்புவதற்கு ஐநா போன்ற தளங்களை பாகிஸ்தானின் பிரதிநிதி தவறாகப் பயன்படுத்துவதும், பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றிதிரியும் அளவுக்கு தனது நாட்டின் நிலைமை மோசமாக இருந்தும் உலகின் கவனத்தை திசை திருப்ப வீணாக முயல்வது இது முதல் முறை அல்ல. 

சாதாரண மக்களின், குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளுடனும் இயல்பான அண்டை நாடுகளுடனான உறவை பேணவே இந்தியா விரும்புகிறது. 

மேலும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின்படி நிலுவையில் உள்ள பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், இருதரப்பு மற்றும் அமைதியான முறையில் பிரச்னையை தீர்க்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு அர்த்தமுள்ள உரையாடலையும் பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் மட்டுமே நடத்த முடியும். 

அத்தகைய ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது. அதுவரை எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்க உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து எடுக்கும். பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பது, நிதியுதவி செய்வது, ஆயுதம் கொடுப்பது போன்றவற்றை அரசுக் கொள்கையாகக் கொண்டு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளுக்கு விருந்தளிக்கும் இழிவான சாதனையை இந்த நாடு கொண்டுள்ளது" என்றார். 

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு குறித்து பேசிய அவர், "ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கின்றன. பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளும் இதில் அடங்கும். சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக காலி செய்ய வேண்டும்" என்றார்.

காஜல் பட், ஜம்மு காஷ்மீரை சேர்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com