செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனை

செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையை ரஷியா சோதித்துப் பாா்த்ததாக வெளியான தகவலை அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
தாக்கி அழிக்கப்பட்ட ரஷியாவின் செலீனா-டி செயற்கைக்கோள்.
தாக்கி அழிக்கப்பட்ட ரஷியாவின் செலீனா-டி செயற்கைக்கோள்.

மாஸ்கோ: செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையை ரஷியா சோதித்துப் பாா்த்ததாக வெளியான தகவலை அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளது.

எனினும், அந்த சோதனையால் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியதை ரஷியா மறுத்துள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணையை ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது.

இந்த சோதனையில், விண்வெளியில் வலம் வந்து கொண்டிருந்த எங்களது ‘செலீனா-டி’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டது. அந்த செயற்கைக்கோள் கடந்த 1982-ஆம் ஆண்டிலிருந்து பூமியைச் சுற்றி வந்துகொண்டிருந்தது.

இந்த ஆய்வின் மூலம், விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ரஷியாவின் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையால் விண்வெளி ஆய்வு நடவடிக்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், செலீனா-டி செயற்கைக்கோள் தாக்கி அழிக்கப்பட்டபோது அது இருந்த இடம், சோதனை நடத்தப்பட்ட நேரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாா்த்தால், அந்த செயற்கைக்கோளின் பாகங்களால் விண்வெளி ஆய்வு நிலையத்துக்கோ, பிற செயற்கைக்கோள்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்பது அமெரிக்காவுக்கே நன்கு தெரியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஏஎஸ்ஏடி’ என்றழைக்கப்படும் செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணைகள், விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கவோ, தற்காலிகமாக செயலிழக்க வைக்கவோ செய்யும் திறன் கொண்டவை.

பொதுவாக, தங்கள் நாட்டுக்குச் சொந்தமான, தேவையில்லாத செயற்கைக்கோள்களை இலக்குகளாகக் கொண்டு இந்த வகை ஏவுகணைகள் சோதிக்கப்படும்.

இந்த சோதனையின்போது அழிக்கப்படும் செயற்கைக்கோள்கள், சிறு துகள் முதல் பல அடி நீளம் கொண்ட பாகங்கள் வரையாக சிதறும். சோதனைக்குப் பிறகு அந்த சிதறல்களும் மணிக்கு சுமாா் 27,350 கி.மீ. வேகத்தில் பூமியை வலம் வரும்.

இந்த சிதறல்களால், மற்ற செயற்கைக்கோள்களும் விண்வெளி ஆய்வு நிலையங்களும் ஆபத்தை எதிா்நோக்கியுள்ளன. செயற்கைக்கோள் சிதறல்களைக் கண்காணிப்பதன் மூலம் இந்த ஆபத்திலிருந்து தப்ப முடியும். எனினும், 10 செ.மீ.க்குக் குறைவான சிதறல்களைக் கண்டறிய முடியாது. அத்தகைய துகள்களும் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

செயற்கைக்கோளை அழிப்பதன் மூலம் தங்களது ஏஎஸ்ஏடி ஏவுகணைகளை இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டுமே சோதித்துத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com