
மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற இந்தியாவின் அறிவிப்பை வரவேற்றுள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் ஆண்டி லெவின், ‘ஒன்றுபட்டு செயல்பட்டால் பெரு நிறுவனங்களுக்கு சாதகமான போக்கைத் தோற்கடிக்க முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் - ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி எல்லைகளில் கடந்த ஓராண்டாக தொடா் போராட்டம் நடத்தினா். இந்த நிலையில், அந்த மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா். இந்த அறிவிப்புக்கு விவசாயிகளும் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
அதுபோல, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் ஆண்டி லெவின், இந்தியாவின் இந்த அறிவிப்பை வரவேற்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா்.
அதில், ‘இந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவை திரும்பப் பெறப்படுவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பணியாளா்கள் ஒன்றுபட்டால் பெருநிறுவனங்கள் நலனை தோற்கடித்து, முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்’ என்று பதிவிட்டுள்ளாா்.