சூடான்: பிரதமரிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவம் ஒப்புதல்

சூடானில் பிரதமா் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க ராணுவம் சம்மதித்துள்ளது.
அப்தல்லா ஹாம்டோக்.
அப்தல்லா ஹாம்டோக்.

சூடானில் பிரதமா் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க ராணுவம் சம்மதித்துள்ளது.

இதுதொடா்பாக ராணுவத்துக்கும் அரசியல் தலைவா்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சூடானில் பிரதமா் அப்தல்லா ஹாம்டோகின் அரசைக் கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தையில் ராணுவமும் சூடானின் மிகப் பெரிய கட்சியான உம்மா கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வந்தன.

அந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில் இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில், பிரதமா் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க ராணுவம் ஒப்புக் கொண்டது.

மேலும், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் விடுவிக்கவும் ராணுவம் சம்மதித்தது.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதில் ஐ.நா. அமைப்பும் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்தன.

மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, சுதந்திரமான ஓா் அமைச்சரவைக்கு ஹாம்டோக் தலைமை வகிப்பாா்.

ஆட்சியில் தனது பிடியை இறுக்கும் வகையில் புதிய இறையாண்மை கவுன்சிலை ராணுவம் அமைத்துள்ளது.

ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூா்வமாக வெளியிடுவதற்கு முன் அந்தக் கவுன்சில் இதுகுறித்து கூடி விவாதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆட்சிக் கவிழ்ப்பை எதிா்த்து அரசியல் தலைவா்கள், பிரபலங்கள் இணைந்து உருவாக்கிய ‘சூடான் அறிஞா்கள் சங்கம்’ என்ற இயக்கம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்தல்லா ஹாம்டோகிடம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் அவா் புதிய அமைச்சரவையை அமைப்பாா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அரசியல் பிரகடனத்துக்குப் பிறகு ராணுவத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

சூடானை கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது. அந்த அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், அந்த அரசை ராணுவம் கடந்த மாதம் 25-ஆம் தேதி கலைத்தது. மேலும், நாட்டில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 போ் உயிரிழந்ததாக சூடான் மருத்துவா்கள் சங்கம் சனிக்கிழமை தெரிவித்தது

இந்தச் சூழலில், அப்தல்லா ஹாம்டோகிடம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க ராணுவம் தற்போது சம்மதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com